போதையில் சிங்கத்திற்கு கை கொடுக்க முயன்றவர்.. உயிர் தப்பினார் !

ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று அதனுடன் கைகொடுக்க முயன்ற குடிகார இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வரத்து எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட பார்வையாளர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது ஆப்பிரிக்க சிங்கம் அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்பை தாண்டி, இளைஞர் ஒருவர் சிங்கம் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு இருந்த சிங்கத்துக்கு கைகொடுக்க முயற்சி செய்தார். அப்போது, இரு சிங்கங்கள் ஆக்ரோஷமாக அவரை நோக்கி வந்தது.

இதையடுத்து, பூங்காவில் இருந்த பாதுகாவலரும் மற்றவர்களும், உடனடியாக சிங்கத்தின் மீது கற்களை எறிந்தும், சத்தம் போட்டும் சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பினர். இதனால் கவனம் சிதறிய சிங்கம் அவரை விட்டுவிட்டுச் சென்றது. அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

சிங்கத்திடம் மாட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த நபரின் பெயர் முகேஷ் (35 ), ராஜஸ்தானை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

ஹைதராபாத் மெட்ரோ ரெயில் பணியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். அவர் பின்னர் பகதூர்புரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:
Privacy and cookie settings