தடகள வீராங்கனையான பிங்கி பிரமாணிக் பெண் உருவத்தில் இருக்கும் ஆண் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட ஜீன் கோளாறுகள் காரணமாக "male pseudohermaphroditism'' என்ற அரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதாவது அவரது இனப்பெருக்க உள் உறுப்புகள் ஆண்களுக்கானவை (testes). ஆனால், அவரது வெளிப்புற இனப்பெருக்க உறுப்பு பெண்களுக்கானதாக உள்ளதாக என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது அவரை வெளியில் இருந்து பார்த்தால் பெண்ணாகத் தோன்றினாலும் அவர் ஆண் தான் என்பது மருத்துவர்களின் கருத்து. அதே நேரத்தில் பெண் இனப்பெருக்க உறுப்பை வைத்துக் கொண்டு அவர் எப்படி ஒரு பெண்ணை கற்பழித்திருக்க முடியும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவருடன் நெடுநாட்கள் வசித்த ஒரு பெண் தன்னை பிங்கி கற்பழித்து விட்டதாகக் கூறியதையடுத்தே பிரச்சனை வெடித்தது. மேலும் தன்னைப் போலவே மேலும் பல பெண்களை பிங்கி பலாத்காரம் செய்துள்ளதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவின் அறிக்கைப்படி, பிங்கியின் மரபணுச் சோதனையில் அவருக்கு ஜீன்களில் ஆண்தன்மை இருந்தாலும்,
ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய இனப்பெருக்க உறுப்புகள் அவரிடம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி அந்தப் பெண்ணை பிங்கி கற்பழித்திருக்க வாய்ப்புக்கள் குறைவே.
அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடன் இயற்கைக்கு மாறாக அல்லது விருப்பதுக்கு மாறாக ஏதாவது உறவு வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து பிங்கியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிற பெண்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.