பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர்.
பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள்.
சூரியன் மறையத் தொடங்கியதும் பேசவோ நடக்கவோ கண் விழிக்கவோ முடியாமல் அசைவின்றிக் கிடக்கின்றனர்.
தமது மகன்மார் இருவரும் சூரியனிலிருந்தே உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்வதாக சோயிப் அஹ்மது, அப்துல் ரஷீத்தின் தந்தை முகம்மது ஹாசிம் நம்புகிறார்.
ஆனால், இதனை மருத்துவர்கள் மறுத்து விட்டனர். காரணம், இவர்களை இருட்டறையில் பகல் முழுதும் வைத்த போது இயல்பாகவே இருந்தனர்.
அதேபோல, மழைக் காலங்களில் சூரியன் வராத போதும் இயல்பாகத் தான் இருக்கின்றனர்.
எவ்வாறாயினும், பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்தும் இந்த மர்ம நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
நானும் என் கணவரும் இரத்த உறவுகள். எங்களுக்கு 4 குழந்தைகள். இதில் சோயிப், ரஷீத் இருவருக்கும் இந்த நோய் இருக்கிறது.
மூன்றாவது குழந்தைக்கு இல்லை. 1 வயதான கடைசிக் குழந்தையும் தற்போது இதே பாதிப்பிற்கு உள்ளாகி விட்டான் என்கிறார் சிறுவர்களின் அம்மா.
மருத்துவப் பேராசிரியரான ஜாவித் அக்ரம் இந்த இருவருக்கும் உதவுவதற்கு முன் வந்திருக்கிறார். தற்போது பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் சோயிப்பும் ரஷீத்தும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
முதல் முறையாக இரவில் இருவரும் நடந்திருக்கிறார்கள். விரைவில் நாங்கள் குணமாகி விடுவோம்.
நான் ஆசிரியராக வேண்டும் என விரும்புகிறேன். ரஷீத் இஸ்லாமிய அறிஞராக வேண்டும் என்று விரும்புகிறான் என்று தெரிவித்துள்ளான் சோயிப்.