இந்தியாவில் நடப்பு ஆண்டில் மாம்பழங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என மத்திய விவசாயத்துறை மந்திரி ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி பாராளுமன்றத்தில்
அவர் வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு:-
இதுவரை பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடப்பு ஆண்டில் மாம்பழங்களின் உற்பத்தி 2.1 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் ஜூன் மாத இறுதிக்குள் 18.91 லட்சம் டன்கள் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு இது 18.52 லட்சம் டன்களாக இருந்தது. தெலுங்கானாவில் பருவம் தவறிய மழை, கடுமையான வெப்பம் காரணமாக அங்கு உற்பத்தி பாதிக்கக்கூடும்.
என்றாலும், மற்ற மாநிலங்களை பொறுத்தவரை மாம்பழ உற்பத்தி வழக்கமான முறையிலோ அல்லது சென்ற ஆண்டைவிட சற்று கூடுதலாகவோ இருக்கலாம்.
உள்நாட்டு சந்தைகளை பொறுத்தவரை மாம்பழங்களின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலக அளவில் 1,300-க்கும் அதிகமான மாம்பழ ரகங்கள் உற்பத்தியாகின்றன. இதில், இந்தியாவில் மட்டும் 1,000-த்திற்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் மொத்த மாம்பழ உற்பத்தியில் பாதியளவு ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சார்ந்துள்ளன. இங்கிலாந்து, சவுதி அரேபியா தவிர இந்திய மாம்பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக ஐக்கிய அமீரக நாடுகள் உள்ளன.