அக்னி வெயிலுக்கு அனலாய் தகித்த சென்னை கடந்த இரு தினங்களாக உதகை, கொடைக்கானல் கிளைமேட்டுக்கு மாறிவிட்டது. மே மாதத்தில் ஜில்லென்று மழை பெய்வது நன்றாக இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அடைமழையைப் பார்த்தாலே அச்சம் எழாமல் இல்லை.
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் சோக வடுவே சென்னைவாசிகளுக்கு இன்னமும் மறையவில்லை அதற்குள் மே மாத கோடை மழை விடிய விடிய பெய்து மிரட்டி வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சராசரியாக 180 மி.மீட்டருக்கும் மேலாக மழை அளவு பதிவாகியுள்ளது. புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் மட்டும் கடந்த இரு தினங்களில் 222 மி.மீ அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது.
இரவு முதல் கொட்டி தீர்த்த மழை சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பெய்து வருகிறது. தெளிய விட்டு தெளிய விட்டு மழை பெய்தால் நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அக்னி வெயிலுக்கு இதமாய் கொஞ்சம் மழை பெய்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கியவர்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு பெய்து வருகிறது மழை. சீக்கிரம் விட்டால் தேவலை விளையாடப் போகலாம் என்பதுதான் விடுமுறையில் உள்ள சிறுவர்களின் கோரிக்கையாய் இருக்கிறது.
டிசம்பர் மாத மழையைப் போல இல்லாமல் சூறைக்காற்றுடன் இடியும் மின்னலுமாய் கொட்டும் மழையால் சென்னைவாசிகள் மீண்டும் மிரண்டு போயிருப்பது என்னவோ உண்மைதான். முறிந்து விழும் மரங்களும் மின்வெட்டை ஏற்படுத்துகிறது.
டிசம்பர் மாத மழை வெள்ளத்தைப் போல மீண்டும் வெள்ளம் வருமோ? என்பதுதான் இப்போது அனைவரின் பேச்சாக இருக்கிறது. 14 மணிநேரம் மின் வெட்டில் தவித்த மயிலாப்பூர்வாசிகள்
இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பழைய கதையை அச்சத்துடன் பேசியவாரே உறங்கியும் உறங்காமலும் தவித்தனர்.
கால்வாய் ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வீடுகளுக்கு புகுந்து கொள்ள, அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் ஏராளமான மக்கள். ஆபத்துக்கு உதவும் என்று சேகரித்து வைத்த கோணிப்பைகள்தான் இப்போது அவர்களுக்கு உதவி வருகிறது.
சென்னையில் சாலையி்ல விழுந்த 44 மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு,குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் கூறியுள்ளார்
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் தற்போது நெல்லூருக்கு தென் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை ஒட்டி நகரக் கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று ஆறுதல் செய்தி கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினாலும் ஒடிஷாவை நோக்கி நகரும் என்று கூறுவதால் சென்னைவாசிகள் அச்சப்பட தேவையில்லை. டிசம்பர் மாதம் போல
சென்னைக்கு வெள்ள ஆபத்து இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஆறுதல் செய்தி கூறியுள்ளார். ஆகவே சென்னைவாசிகளே கோடை மழையை அஞ்சாமல் அனுபவியுங்கள்.