முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் விசாரணை இது. நாளை அனைத்துத் தரப்பும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர்..
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை பி.வி.ஆச்சார்யா வாதத்தை எடுத்து வைத்தார்.
அப்போது சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார்.
இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றே அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி நாளை மீண்டும் விசாரணை தொடங்குகிறது. நாளையுடன் விவாதங்கள் அனைத்தும் முடியும் என்று தெரிகிறது. கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா நாளையும் தனது வாதத்தை எடுத்து வைக்கவுள்ளார்.
நாளைய அமர்வின்போது இந்த அப்பீல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று கூறித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்கவுள்ளனர்.