ஓசூரில் கடத்தப்பட்ட நகராட்சி நில அளவையாளர் கடத்தல் கும்பலால் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் நகராட்சியில் நில அளவையாளராக பணிபுரிந்து வந்த குவளைச் செழியன் மர்ம நபர்களால் நேற்று கடத்தப்பட்டார்.
குவளை செழியனை கடத்திய கும்பல் அவரது மனைவிக்கு போன் செய்து ரூ50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து ரேவதி போலீசில் புகார் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குவளை செழியனை போலீசார் தேடத் தொடங்கினர். அவரது செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்ததும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கே.என்.புதூர் அருகே சாலையோரத்தில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தீக்காயங்களுடன் தப்பி ஓடி அருகில் இருந்த பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்தார். அவரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓசூர் நகராட்சி நில அளவையாளர் குவளைச்செழியனை ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தி வந்து காருடன் எரித்துக் கொன்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
மேலும் குவளைசெழியனை கடத்தி கிருஷ்ணகிரி, பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் காரிலேயே அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.
இரவு முழுவதும் காரிலேயே சுற்றி வந்த கும்பல் இன்று அதிகாலை பொம்மிடி வழியாக ஓமலூர் நோக்கி வந்தபோது மழை பெய்ததால் சாலையில் காரின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதனால் தவித்த கும்பல் போலீசில் சிக்கி விடுவோம் என பயந்து குவளை செழியனை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
தொடர்ந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காருடன் எரிந்து பிணமாக கிடந்த குவளை செழியன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.