அட திரும்பவுமா...தமாகாவைக் கலைக்கப் போகிறாரா ஜி.கே.வாசன்?

தமாகாவை கலைக்கப் போவதாக வரும் செய்திகள் வதந்தியானவை. உண்மையில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதன் அடிப்படையில்தான் 
நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியை நம்பி காத்திருந்த வாசனுக்கு சீட் தருகிறோம், 

ஆனால் இரட்டை இலையில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு அவர் தயக்கம் காட்டினார். மேலும் மக்கள் நலக் கூட்டணியில் இணையவும் முடிவு செய்தார்.

இதை விரும்பாத மூத்த தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகினர். எஸ்.ஆர்.பி. அதிமுகவில் இணைந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பியாகப் போகிறார். பீட்டர் காங்கிரஸுக்கே போய் விட்டார். 

தேர்தலில் தமாகா மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. எங்குமே டெபாசிட் கிடைக்கவில்லை. 26 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியே அதற்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சதவீத வாக்குகளைக் கூட அதனால் வாங்க முடியவில்லை. 

இந்த நிலையில் கட்சியின் தோல்வி குறித்து வேட்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் வாசன். மேலும் அவர் கட்சியை கலைத்து விடப் போவதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்து வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர கூறுகையில், தமாகாவை கலைக்கப் போவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தற்போது இருப்பதை விடவும் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தமாகா துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பலம் சேர்க்கும் வகையில் என்னுடைய சுற்றுப்பயணம் எப்படி அமைய வேண்டும்?, கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்படும். 

நிர்வாகிகளின் ஆலோசனைக்கு ஏற்றவாறு உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய சுற்றுப்பயணம் அமையும் என்றார் வாசன். உள்ளாட்சித் தேர்தலில் தமாகா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து வாசன் தெரிவிக்கவில்லை. 

தனது கட்சியினருடன் ஆலோசித்த பின்னரே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இருக்காது என்று உறுதியாக சொல்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings