மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து மதியம் 3 மணிக்கு மேல் முடிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சேலம், திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களில் 30 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. மழை காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து பிற்பகல் 3 மணிக்கு மேல் முடிவு செய்யப்படும் என்றார்.
மழை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்குமாறு திமுக கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு லக்கானி சிரித்துக் கொண்டே கூறுகையில்,
எதிர்பார்க்கத் தான் நீங்கள் உள்ளீர்களே. வாக்குப்பதிவு முடிந்த பிறகு பதிவான வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தை அறிவிக்கவே நான் உள்ளேன் என்றார்.
எதிர்பார்க்கத் தான் நீங்கள் உள்ளீர்களே. வாக்குப்பதிவு முடிந்த பிறகு பதிவான வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தை அறிவிக்கவே நான் உள்ளேன் என்றார்.