தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றதும், அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டக் கோப்பில் ஜெயலலிதா முதல் கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று, நாளை மீண்டும் அதிமுக அரசு பதவியேற்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகிறார்.
முதல்வராக பதவியேற்றதும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் அவர் ஈடுபட உள்ளார். அதன் முதல்கட்டமாக 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நாளை அவர் முதல் கையெழுத்திட இருக்கிறாராம்.
இதற்கான கோப்புகளைத் தயாரிக்கும் பணியில் மின்சார வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
அதன்படி, வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 1 -100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட்டுக்கு மேல் என்ற பிரிவுகளில், வெவ்வேறு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
500 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, 1 யூனிட்டுக்கு, மூன்று முதல், 4.60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நுகர்வோருக்கு, குறிப்பிட்ட தொகையை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
ஆனால், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர், மானியம் இல்லாமல் முழு கட்டணமும் அதாவது, 1 யூனிட், 6.60 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது அனைத்து வீடுகளிலுமே ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப் - டாப் உள்ளிட்ட மின் சாதனங்கள் கட்டாயம் இடம் பெற்றுள்ளன.
இதனால் மின் பயன்பாடு அதிகமாகி, பல வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, நடுத்தரவர்க்கத்தினரும் மின் கட்டணத்தால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து, தி.மு.க., பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தன.
அதேசமயம், அதிமுக தேர்தல் அறிக்கையில், 'தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதும் இல்லாமல், வீடுகளுக்கு இலவசமாகவழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
எனவே, தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டே நாளை முதல்வராக பதவியேற்றதும் இந்த இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாளை இத்திட்டத்தில் அவர் கையெழுத்திட்டு அரசாணை வெளியானதும், இத்திட்டம் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும். அதை, தமிழக அரசு மானியமாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.