ரயிலில் பிரசவம் பார்த்த இவர்கள் !

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்.
ரெயில் மதியம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது நிர்மலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

வலியால் துடித்த மனைவியை பார்த்து ராஜு பதறினார். தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவுமாறு ரெயிலில் வந்த பெண் பயணிகளிடம் கெஞ்சினார். 

ஆனால் யாரும் முன்வரவில்லை.அப்போது ரெயிலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த சில திருநங்கைகள் நிர்மலாவின் வேதனையையும், ராஜிவின் பரிதவிப்பையும் கண்டு திடுக்கிட்டனர்.

அவர்கள் சில பெண்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் நமக்கெதற்கு வம்பு என யாரும் முன்வரவில்லை.இதனால் திருநங்கைகளே சேர்ந்து புடவையால் திரை அமைத்து நிர்மலாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் நிர்மலா ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

ராமகுண்டம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது தாயையும், சேயையும் பத்திரமாக இறக்கிய திருநங்கைகள் 108 ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதோடு தாங்கள் பிச்சை எடுத்து சேர்த்த 500 ரூபாயை குழந்தையின் கையில் அன்பளிப்பாக கொடுத்து சென்றனர். திருநங்கைகளின் இந்த மனிதாபிமான செயலை டாக்டர்கள் உள்பட பலர் வியந்து பாராட்டினர்.

சொந்தங்களே மனித நேயத்ததோடு பாராட்டுங்கள்..!எந்த பாலினம் என கேட்போரிடம் உரக்க சொல்லுங்கள் மனிதம் முழுமையாய் நிறைந்திருக்கும் மனித இனம் என்று..
Tags:
Privacy and cookie settings