சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று.
இந்த விமான நிலையம் கடந்த 2013-ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கண்ணாடிகள் விழுந்து உடைவதும், மேற்கூரை பெயர்ந்து விழும் சம்பவங்களும் தொடர் கதையாகி வந்தன.
கடந்த மாதத்தில் மட்டும் 3 முறை இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விமான போக்குவரத்து துறை அமைச்சக இணை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு சமீபத்தில் சென்னை விமான நிலைய அமைப்பு மற்றும் வசதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என அந்த குழு தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழுந்து உடைவதும், மேற்கூரை பெயர்ந்து விழும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில் சென்னை விமான நலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.