தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய ஆர். காமராஜ் நாளை அமைச்சராக பொறுப்பேற்கும்போது பதவியேற்பு விழா நடக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வாழாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரிடம் உணவு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் ரூ.45 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து குமார் கூறுகையில், அமைச்சர் காமராஜ் என்னிடம் பணம் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் நன்னிலம் தொகுதியில் அவரை எதிர்த்து நான் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
ஆனால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி என் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார். வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
தேர்தல் முடிவு வெளியான மறுநாள் முழுதொகையையும் திருப்பி அளிப்பதாக அவரின் நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் இன்னும் எனக்கு பணம் கிடைக்கவில்லை.
அதனால் நாளை காமராஜ் அமைச்சராக பதவியேற்கும்போது அந்த விழா நடக்கும் இடத்தில் நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றார்.