உத்தர பிரதேசத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக காரணமாக தலித் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல்.
உத்தரபிரதேச மாநிலம் கயிராதியா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்தாண்டு ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹரேவா கிராமத்தில் இதே போல ஐந்து தலித் பெண்கள் நிர்வாணப் படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஞாயிறன்று வீட்டில் தனியாக இருந்த தலித் பெண் ஒருவரை ஒரு கும்பல் அடித்து வெளியே தெருவிற்கு இழுத்து வந்துள்ளனர்.
பின்னர் அவரை அக்கும்பல் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். சம்பவத்தின் போது அவரது கணவரும், குடும்பத்தாரும் வீட்டில் இல்லை.
வழியெங்கும் அவரை அடித்து உதைத்த கும்பல் பின்னர் குளம் ஒன்றிற்கு அருகே அவரை விட்டு விட்டுச் சென்றது.
இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இவ்வாறு அப்பெண் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டபோதும் முதலில் போலீஸார் புகாரை எடுக்கவில்லை.
குடும்பச் சண்டை என்று கூறி புகாரை கண்டு கொள்ளாமல் விட்டனர். பின்னர் தான் புகார் பதிவு செய்யப்பட்டது.