மலவாயிலில் அரிப்பா நீங்கள் செய்ய வேண்டியது !

மலவாயிலில் அரிப்பிற்கான காரணத்தைக் கண்டறியாது சுயவைத்தியத்தில் ஈடுபடுவது நோயை அதிகரிக்குமே ஒழிய தீர்க்காது.



காரணத்தை கண்டறிய முடியாவிட்டால் நீங்கள் செய்யக் கூடியவை எவை? சருமத்தை உறுத்தக் கூடிய எந்தப் பொருளையும் உபயோகிக்க வேண்டாம்.

வாசனையூட்டிய சோப், மருந்து கலந்த சோப் போன்றை வேண்டாம். ஒவ்வொரு தடவையும் சோப் போடுவது கூடாது. சோப் போட்டு கழுவிய பின்னர்

அதன் எச்சங்கள் சருமத்தில் ஒட்டியிருக்காதவாறு நன்கு அலசிக் கழுவுங்கள். வாசனைத் திரவியங்கள், ஸ்பிரிட், போன்றவற்றைத் தவிருங்கள். அவ்விடத்தில் பவுடர் போடுவதும் கூடாது.

நிறம் மணம் அற்ற சோப் வகைகளை உபயோகியுங்கள். மலம் கழித்த பின் கழுவியம் ஈரத்தை ஒற்றி எடுங்கள். கடுமையாத் தேய்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஏதாவது உணவு வகைகள்தான் அரிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தால் அதைத் தவிர்க்கவும். அரிப்பு சிலகாலத்தில் மறைந்துவிடும்.



மலம் கழித்தால் உடனடியாகக் கழுவுங்கள். மலவாயிலால் வாய்வு கழியும்போது அங்கு ஈரலிப்பு ஏற்படுவதாக உணர்ந்தாலும் கழுவுங்கள். அதேபோல படுக்கப் போகும் முன்னரும் ஒரு தடவை கழுவுங்கள்.

கழுவுவதற்கு சுத்தமான நீரையே உபயோகியுங்கள். சோப் ஒவ்வொரு தடவையும் உபயோகிக்க வேண்டியதில்லை. சோப் உபயோகித்தால் அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே கூறினோம்.

தினமும் குளியுங்கள் குளித்த பின்னர் ஈரத்தை ஓற்றி எடுத்து நீரை அகற்றுங்கள். மென்மையான துணியிலான டவல்களால் ஒற்றி எடுங்கள். கடுமையான அரிப்பும் முடி அதிகமாகவும் உள்ளவர்கள் ஹெயர் டிரையர் கொண்டு உலர்த்துமாறு

மேலை நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் வெப்பமான சூழலில் வாழும் எங்களுக்கு ஈரத்தை நன்கு ஒற்றி எடுத்தாலே சிறிது நேரத்தில் சருமம் உலர்ந்து விடும்.

உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள். துவைத்து, நன்கு உலர்ந்த உள்ளாடைகளையே அணியுங்கள். மலம் கழித்து கழுவிய ஈரம் அல்லது குளித்த ஈரம் நன்கு உலர்ந்த பின்னரே உள்ளாடைகளை அணிய வேண்டும்.

அரிப்பு எடுத்தாலும் சொறிவதை கூடியவரை தவிருங்கள். முக்கியமாக நகமுள்ள விரல்களால் சொறிவது கூடாது. நகங்களை குட்டையாக வெட்டி அழுக்கின்றி பராமரிப்பது அவசியம்.



அரிப்பு கடுமையாக இருந்தால் அதற்கு எதிரான அன்ரிஹிஸ்டமின் மாத்திரை ஒன்றை இரவில் உபயோகிக்கலாம். அவில் (Avil), பிரிட்டோன், லொராடடின், செற்ரிசின் போன்ற பல இவற்றில் அடங்கும்.

கிறீம் வகைகள் பல உள்ளன. பங்கசுக்கு எதிரானது, அரிப்பை குறைக்கும் ஸ்டிரொயிட் கிறீம், குளிர்மையாகக்கும் கிறீம் எனப் பலவகை. எனினும் மருத்து ஆலோசனை இன்றி கண்ட கிறீம் வகைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மலவாயில் அரிப்பிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில் பயனில்லை.
எந்த மருத்துவமானாலும் மேலே சொன்ன வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். 

டாக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col)
Tags:
Privacy and cookie settings