சிறுமிகளை அம்மனாக நினைத்து வழிபடும் கிராமம் !

இந்தியாவின் தமிழ்நாட்டில் அழகர்கோவில் அருகே செட்டியார்பட்டியில் 7 சிறுமிகளை அம்மனாக நினைத்து கிராம மக்கள் வழிபடும் வினோத திருவிழா நடைபெற்றது.
மதுரை அருகே அழகர்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள செட்டியார்பட்டியில் நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு 6 அடி உயரத்தில் நாகம்மாள் சிலை உள்ளது. 

இங்கு ஒவ்வொரு வைகாசி மாதமும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி 15 தினங்களுக்கு முன்பே கிராம மக்கள் கடும் விரதம் இருந்தனர்.

7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. அந்த சிறுமிகளை அம்மனாக பாவித்து கிராம மக்கள் வணங்கி வந்தனர்.

முளைப்பாரி ஊர்வலம்

அந்த 7 சிறுமிகளும் கிராம மக்களுக்கு வாக்கு சொல்லி வந்தனர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நாகம்மாள் சிலையுடனும், முளைப்பாரியுடனும் ஊர்வலமாக 
மந்தையம்மன் கோவில் வழியாக வந்தனர். அவர்கள் வெள்ளிமலை கோவில் வரை சென்றனர். மறுநாள் புலிக் கண்மாயில் சிலையையும், முளைப்பாரியையும் கரைத்தனர்.

இரவில் கலை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:
Privacy and cookie settings