ருக்மணி அம்மாளுக்கு வரும் செப்டம்பர் 10ம் தேதி வந்தால் 100 வயது. சென்னை திருவல்லிக் கேணியில் வசிக்கும் இவர், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு தேர்தல் விடாமல் வாக்களித்து வருகிறார்.
இந்த சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க, அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, ஆட்டோ பிடித்து ஏழு மணிக்கெல்லாம் வாக்குச் சாவடிக்கு வந்து விட்டார்.
மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக வரிசை இருந்தமையால் எளிதில் வாக்களித்து, 10 நிமிடத்துக்குள் வீட்டுக்கு செல்ல தயாரானார். அவரின் வயதை அறிந்த நாம் அவருடனேயே புறப்பட்டோம்.
ரிலாக்ஸாகப் பேசுகிறார் ருக்மணி அம்மாள். எனக்கு சொந்த ஊரு செங்கல்பட்டு. என் கூடப் பிறந்தவர்கள் 4 அண்ணன்கள், 3 தங்கைகள். அவங்கள்ல நான் மட்டும் தான் இப்ப இருக்கேன்.
என் 8 வயசுலயே எனக்கு கல்யாணமாயிடுச்சு. 11 வயசுல சென்னை திருவல்லிக் கேணிக்கு வந்தேன். அப்ப இருந்து அதே வீட்டுல தான் இருக்கேன்.
இங்க தான் ஒன்பது பிள்ளைகளையும் பெற்றேன். எல்லா எலெக்ஷன்லயும் ஓட்டுப் போடுறேன். இன்னிக்கும் ஓட்டுப் போட்டுட்டேன். என்றபடியே தனது இடது ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி பெருமைப் படுகிறார்.
ருக்மணி அம்மாளின் கடைசி மகன் அழகிரி, தனது வேலைகளை தானே செய்வார்.
காலை 5.30 க்கு எழுந்து பெருமாளை சேவித்து காபி குடித்து விட்டு காய்கறி நறுக்குவது, சமையலறையை பராமரிப்பது என அவரால் இயன்ற உதவியை செய்வார்.
பூஜை பாத்திரத்தை தானே தேய்த்து வைப்பார். ஏழு ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும், எனது தந்தையின் காலத்துக்குப் பின் 1976 முதல் வளர்த்து வந்தார்.
9 பேருக்கும் திருமணம் நடந்து, பேரன் பேத்திகள் 30 பேரை பார்த்தவர். அது மட்டுமில்லை கொள்ளுப் பேரப்பிள்ளை களையும் பார்த்தவர். கிட்டதட்ட 5 தலைமுறைகளை கண்டவர்” என குறிப்பிடுகிறார்.
ருக்மணி அம்மாள், தான் கண்ட தேர்தல்கள் பற்றி பேசுகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1951ல் நடந்தது. அந்த தேர்தலில் இருந்து நான் ஓட்டுப் போட்டு வருகிறேன்.
எனது பிள்ளைகளையும் ஓட்டுப் போட வலியுறுத்துகிறேன். அவர்களும், பிள்ளைகளையும் பேரப்பிள்ளை களையும் தவறாமல் ஓட்டுப் போடச் சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் பேப்பரில் ஓட்டுப் போடும் போது பேப்பரை ஒரே நேராக மடிக்க வேண்டும். இல்லா விட்டால் மை கசிந்து வேறு சின்னத்தில் பரவி, ஓட்டு செல்லாமல் போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.
ஆனால் எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷினில் போடுவதால் அந்த பயம் இப்போது இல்லை. இது வரைக்கும் வாக்களிக்க பணம் வாங்கியது இல்லை.
வாக்குச்சாவடி அருகில் தான் இருக்கு. அதனால் பெரும்பாலும் என் பிள்ளைகளோடு தான் ஓட்டுப் போட செல்வேன்.
கல்யாணம் பண்ணிக் கொடுத்த பெண் பிள்ளைகளையும் ஓட்டுப் போட்டாச்சானு கேட்டு உறுதிப் படுத்திப்பேன் என்றவர், யாருக்கு ஓட்டுப்போட்டேன்னு மட்டும் கேட்காதீங்க என்று உஷாராகப் பேசுகிறார்.
இந்த 100 வயதிலும் வாக்களிப்பதை தன் தலையாய கடமையாக எண்ணும் இந்த பாட்டி போன்றோர்களால் தான் இந்த ஜனநாயகம் தழைக்கிறது. -ச.சந்திரமௌலி