தமிழக அரசின் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது ஏமாற்று வேலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் விதத்தால் 1.11 கோடி நுகர்வோருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பயனும் ஏற்படாது.
மொத்தத்தில் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும். 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்,
''மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்'' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் அறிக்கை சொல்வது
ஒரு வீட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது; 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால்
அதில் 100 யூனிட்டை இலவசமாக கருதி கழித்து விட்டு, மீதமுள்ள 100 யூனிட் மின்சாரத்திற்கு தற்போதைய கணக்கீட்டு முறைப்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் அதிமுக அளித்த வாக்குறுதியின் பொருள். ஆனால், அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணை இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது.
அரசு ஆணை
அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும்.
இப்படிதான் செய்யனும்
உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த வீட்டிற்கு இப்போது ரூ.2790 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி மொத்தப் பயன்பாட்டில் 100 யூனிட்டுகளை கழித்து விட்டு மீதமுள்ள 500 யூனிட்டுகளுக்கு ரூ.1330 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
இது தான் நேர்மையான நடைமுறையாக இருக்கும். அவ்வாறு செய்யும் போது அக்குடும்பத்திற்கு ரூ.1460 மிச்சமாகும்.
கட்டண சலுகை பறிபோகிறது
ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி மொத்தக்கட்டணமான ரூ.2790 -ல் 100 யூனிட்டுகளுக்கான கட்டணம் ரூ.350-ஐ கழித்து விட்டு, மீதமுள்ள ரூ.2440 செலுத்த வேண்டும்.
இதனால் இத்திட்டப்படி அந்த குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய கட்டண சலுகையில் ரூ.1110 குறைகிறது. அதேபோல், ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால்
இலவச மின்சாரத் திட்டத்தின்படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள 100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்து வோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மின்சாரத் திட்டத்தின்படி இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்பட வேண்டும்;
ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன் கிடைக்காது.
பாமகவுக்கு உடன்பாடு இல்லை
கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கான இடுபொருட்கள் ஆகியவை மட்டும் தான் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை ஆகும். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு
ஏற்கெனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்குவங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை.
நலிவடையும் மின்வாரியம்
ஏற்கெனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும்.
அதேநேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.