உத்தரப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பாளர்கள்...போலீஸார் பயங்கர மோதல் 21 பேர் பலி !

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு பூங்காவை ஆக்கரமித்திருந்தவர்களை வெளியேற்ற போலீஸார் முயன்றபோது அவர்களுக்கும்,
ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் அந்தப் பூங்காவை ஆக்கிரமித்திருந்தனர். அவர்களை அகற்ற போலீஸார் முயன்றபோது ஆக்கிரமிப்பாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த மோதல்களில் போலீஸ் தரப்பில் மதுரா எஸ்.பி. முகுல் திவிவேதி கொல்லப்பட்டார். அதேபோல பரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ் குமாரும் கொல்லப்பட்டார். 

இருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட பூங்கா ஜவஹர் பாக் பகுதியில் உள்ளது. 260 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பூங்காவை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து தங்கியுள்ளனர். 

இவர்களை வெளியேற்ற நடந்த பல்வேறு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. கோர்ட் உத்தரவிட்டும் கூட அவர்கள் செல்லவில்லை. இவர்கள் ஜெய் குருதேவ் என்ற மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 

இவர்களை சத்யாகிரஹிகள் என்றும் கூறுவர். மதத்தின் பெயரால் இவர்கள் பூங்காவை ஆக்கிரமித்துக் கொண்டு வெளியேறாமல் இருந்து வந்தனர். மதப் பிரச்சினையாகி விடுமே என்று போலீஸாரும் மிகவும் கவனமாக இவர்களைக் கையாண்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் களம் இறங்கினர். போலீஸார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது அவர்கள் திடீரென தாக்குதலில் இறங்கினர். கற்களால் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர்.

இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். மாவட்ட கலெக்டர் ராஜேஷ் குமார் கூறுகையில், ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் கற்களை வீசித் தாக்கினர். பின்னர் கையெறி குண்டுகளையும் அவர்கள் வீசினர். 

மேலும் துப்பாக்கிகளையும் எடுத்து சுட ஆரம்பித்தனர். நிலைமை எல்லை மீறிப் போனதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றார். 
ஆனால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நேரடியாக பலியானவர்களை விட ஆக்கிரமிப்பாளர்கள் வீசிய கையெறி குண்டுகள், துப்பாக்கியால் சுட்டது ஆகியவற்றால் அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பலியானவர்களே அதிகம் என்கிறார்கள். 

மரங்களின் உச்சியில் உட்கார்ந்து கொண்டும் அவர்கள் போலீஸாரை நோக்கிச் சுட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். தற்போது மதுராவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பலியான போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விரைந்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings