பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 100 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் லட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே 35 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள அவர்,
லட்சியத்தை அடைய 4-வது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கில்ஜி (46).
மருத்துவ துறையில் பணியாற்றி வரும் சர்தாருக்கு ஏற்கெனவே 3 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் மூத்த குழந்தைக்கு 15 வயதும், கடைக்குட்டிக்கு 2 வாரங்களும் வயது ஆகிறது.
இந்நிலையில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது தான் தனது லட்சியம் என்றும், இது தான் இஸ்லாம் மதத்துக்கு தான் ஆற்றும் கடமை என்றும் சர்தார் தெரிவிக்கிறார்.
தனது லட்சியத்தை எட்டுவதற்காக 4-வது திருமணம் செய்து கொள்ளவும் அவர் தயாராகி வருகிறார்.
இத்தனை பெரிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சர்தார் உள்ளூரிலேயே முறையற்ற மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட சிறிய வகையிலான நோய்களுக்கு மட்டும் மருத்துவம் பார்த்து, அதற்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கிறார்.
குடும்பத்துக்கான மாதச் செலவுக்கு ரூ.1,20,000 வரை தேவைப் படுவதாகவும் அதற்காக கடுமையாக உழைப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இஸ்லாமிய முறைப்படி பாகிஸ்தானில் நான்கு மனைவிகள் வரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறது.
எனினும் சமூக ஆர்வலர்கள் பலர் பலதார திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
5 படுக்கையறை கொண்ட மண் குடிசை வீட்டில் சர்தாரின் 3 மனைவிகளும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அதே சமயம் வாழ்க்கை இனிமையாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர்களில் ஒருவரும் பதில் அளிக்கவில்லை.
இதில் வேடிக்கை என்னவெனில் சர்தாரின் மூத்த மகன்களில் ஒருவரான முகமது ஈசா (13) தந்தையை மிஞ்சும் வகையில் தனக்கு திருமணமானால் 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.