ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.60 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்தது. நெல் உற்பத்திக்கான செலவினங்களை கணக்கில் கொண்டும்,
போதிய அளவில் நெல்லை இருப்பில் வைத்துக் கொள்ளும் விதமாகவும் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது. இதேபோல் பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்கவும் ஆதார விலை அதிகரிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான நெல் சாகுபடி பல மாநிலங்களில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
அப்போது நடப்பு ஆண்டில் ஒரு குவிண்டால் பொதுவகை நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.60 அதிகரிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கான தொகை ரூ.1,410 நடப்பு பயிர் சாகுபடி காலத்தில்(காரீப் பருவம்) ரூ.1,470 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதேபோல் ஒரு குவிண்டால் ‘ஏ’ கிரேடு நெல்லுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்த பட்ச ஆதார விலை ரூ.1,450-ல் இருந்து ரூ.60 அதிகரிக்கப்பட்டு ரூ.1,510 ஆக வழங்கப்படும்.
மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வேளாண்துறை மந்திரி ராதாமோகன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரித்து இருக்கிறோம். இவை எல்லாவற்றையும் விட துவரம் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் இறக்குமதியை குறைக்கவும் ஒரு குவிண்டால் பருப்புக்கு ரூ.425 ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த உயர்வால் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் துவரம் பருப்புக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்த பட்ச ஆதார விலை ரூ.4,625-ல் இருந்து ரூ.5,050 ஆக உயருகிறது.
கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் உளுந்தம் பருப்புக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.4,625 தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பாசிப்பருப்புக்கு கடந்த ஆண்டு குறைந்த பட்ச ஆதாரவிலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,850 ஆக இருந்தது. அது தற்போது ரூ.5,225 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வேர்க்கடலை, சோயாபீன், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ.100 முதல் ரூ.200 வழங்கப்படும். இந்த உயர்வுத் தொகை காரணமாக பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயராமல் தடுக்கப்படும். மேலும் எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் நிலப்பரப்பும் அதிகமாகும்.
சாதாரண மற்றும் உயர்தர பருத்திக்கான குறைந்த பட்ச ஆதார விலையும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.60 அதிகரிக்கப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலில் இல்லாத தமிழ்நாடு, கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்படும் வரை, தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உணவு தானியத்தை விட கூடுதலாக வழங்கிடவும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
அதன்படி வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 41,800 டன் உணவு தானியங்களும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு 20,507 டன் உணவு தானியங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.