ஈரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர்கள், நீதிமன்றத்தை நாடிய நெஞ்சை பிளக்கும் சம்பவம் தமிழகத்தின் அண்டை மாநில ஆந்திர நகரமான சித்தூரில் நடந்துள்ளது.
விவசாயியான ரமணப்பா, சரஸ்வதி தம்பதியின் 8 மாத பெண் குழந்தை ஞான சாய் பிறந்தது முதல் ஈரல் பாதிப்பில் அவதிப்பட்டு வருகிறது. 5 மாதமாக பெங்களூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இதற்காக ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
பணத்திற்காக அலைந்து பார்த்தும் முடியாததால், அந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர் சார்பில்,
தம்பல்லபல்லே ஜூனியர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி வாசுதேவ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு,
இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தையோ அல்லது ஹைகோர்ட்டையோ அணுகும்படியும் உத்தரவிட்டார்.
ரமணப்பா நிருபர்களிடம் கூறுகையில், "நான் எனது குழந்தைக்காக ஈரல் தானம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அறுவை சிகிச்சைக்கு, ரூ.30 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும், ஈரல் தானம் செய்தவரும்,
அதை பெற்றுக்கொண்ட நோயாளியும், மாதம் தலா ரூ.30 ஆயிரம் மதிப்புக்கு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிவருமாம். அதற்கெல்லாம் பணமில்லாமல்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மீடியா செய்திகள் மூலம் தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ, சங்கர் யாதவ், தன்னால் முடிந்த உதவிகளை செய்து குழந்தையை காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என சங்கர் யாதவ் உறுதியளித்த நிலையில்,
அதன்படி முதல்வர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்கு தேவைப்படும் பண உதவியை செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.