தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின் மழை !

தமிழகத்தில் கடந்த 8-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நீலகிரி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளை தவிர, 
பிற பகுதிகளில் இந்த மழை பெய்யவில்லை. இந்த பகுதிகளில் அவ்வப்போது இதமான வானிலை நிலவினாலும் பெரும்பாலும் கோடை காலம் போன்றே வெயில் வாட்டி எடுக்கிறது.

இந்த சூழல் மாறி விரைவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, அதாவது 3 நாட்களுக்குப்பின் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கடல் காற்று இல்லாததால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாலை நேரத்தில் மட்டும் அவ்வப்போது ஈரப்பதம் நிரம்பிய காற்று வீசுவதால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

எனினும் மேகக்கூட்டங்கள் தமிழகத்தை நோக்கி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் ஒன்றுசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ஒன்று சேர்ந்தால் 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 23-ந் தேதிக்குப்பின் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இதைப்போல கிழக்கில் இருந்து வரும் காற்று தமிழகத்தில் வீசினாலும் வெப்பத்தின் வீரியம் குறையும். அதுவரை தற்போது இருப்பது போன்ற வெப்பச்சூழல் இருக்கும்.
Tags:
Privacy and cookie settings