கடனாளியான வேட்பாளர்களுக்கு செட்டில் செய்யும் விஜயகாந்த் !

சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 103 வேட்பாளர்களுக்கு 10 கோடியே 30 லட்சம் ரூபாய் செட்டில் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்து போட்டியிட்டது.

இந்த கூட்டணி மரண அடி வாங்கியது. தேமுதிக படுபரிதாபமாக 2.4 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றதால், மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் 104 வேட்பாளர்களும் தேர்தலில் டெபாசிட் இழந்தனர். 

தேர்தலில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 23ம் தேதி விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 

அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தனது கட்சி வேட்பாளர்களுடன், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டசபை தேர்தலில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூட வெற்றி பெறவில்லை. டெபாசிட்டை பறிகொடுத்து தோல்வியை சந்தித்த காரணத்தால் தேமுதிகவினர் சோர்வடைந்துள்ளனர். 

அவர்களின் சோர்வை போக்கவும், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் உற்சாகத்துடன் செயல்படவும் தேமுதிக நிர்வாகிகளிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த வாரத்தில் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 

103 வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய போது, தோல்விக்கான காரணங்கள், கூட்டணி கட்சிகளால் ஏற்பட்ட சாதகங்கள், பாதகங்கள் குறித்து வேட்பாளர்கள் விளக்கினர்.

ஆலோசனைக்கூட்டத்தில் பல நிர்வாகிகள், மநகூ உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் சந்தித்த பிரச்சினைகளை எடுத்துக்கூறினார்களாம். 

சில தொகுதிகளில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களே கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்றும் தங்களின் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்களாம்.
தனித்துப் போட்டியிட்டிருந்தால் கட்சித் தொண்டர்கள், நடுநிலையாளர்களின் ஓட்டுகளை பெற்றிருக்க முடியும். கட்சியின் வாக்கு வங்கியும் அதிகரித்து இருக்கும் என்று தெரிவித்தனராம்.

எத்தனை தேர்தலில் வேண்டுமானாலும் தனித்து போட்டியிடலாம். இந்த அணியுடன் மட்டும் கூட்டணி வேண்டாம் என்று கூறினார்களாம்.

தற்போது உள்ள நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 60ல் இருந்து 120 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கட்சியின் அடித்தளம் பலமாக இருக்கும் என விஜயகாந்திடம் கூறினார்களாம்.

2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை கட்டாயமாக நியமிப்பேன் என்று கூறியுள்ள விஜயகாந்த், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 

அவர்களுக்கு கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கார்டு உறுப்பினர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாராம்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் தேர்தல் செலவு குறித்தும், வீடு, தோட்டங்களை விற்று விற்று கடனாளியாகிவிட்டதாகவும் கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளாராம் விஜயகாந்த்.

தேர்தல் செலவிற்காக அனைத்தையும் விற்று செலவழித்து விட்ட வேட்பாளர்களுக்கு ஆளுக்கு பத்து லட்சம் ரூபாய் என 103 வேட்பாளர்களுக்கும் மொத்தம் 10 கோடியே 30 லட்சம் ரூபாயை செட்டில் செய்வதாக கூறி பாலை வார்த்துள்ளாராம்.

விஜயகாந்த் பணத்தை செட்டில் செய்தால், இந்தியாவிலேயே தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி வேட்பாளர்களுக்கு பணத்தை செட்டில் செய்த தலைவர் என்ற பெருமையை பெறுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Tags:
Privacy and cookie settings