மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
15 சட்டசபை கூடிய பின்னர் அவையில் இருந்து முதன்முறையாக திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. திங்கட்கிழமை சட்டசபை கூடிய நாள் முதலே அதிமுக - திமுக இடையே வாக்குவாதம் நிலவி வருகிறது.
பலம் வாய்ந்த எதிர்கட்சியாக இருக்கும் திமுக கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. மூன்றாவது நாளான இன்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.
பிற்பகலில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி சட்டசபையில் இருந்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் 89 திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்தது பற்றி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் விளக்கமளித்தார். சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் 89 பேர் இருக்கிறோம். வலுவான எதிர்கட்சியாக இருந்தும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளுக்கு பொறுமை காத்து வந்தோம்.
இன்று பேசும் போது குறிப்பிட்ட ஒரு பிரச்சனை குறித்து நான் தெரிவித்த கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. அதோடு நான் பேசிய போது அதிமுக உறுப்பினர் பாண்டியனை குறுக்கீடு செய்ய அனுமதித்தனர். அவர் அமைச்சர் கூட இல்லை சாதாரண உறுப்பினர்தான்.
சட்டசபையில் சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து பேச முடியவில்லை. தொடர்ந்து, பேச முற்பட்டால் தடுக்கிறார்கள். திமுக உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும். திருப்பூர் அருகே பிடிபட்ட பணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்ற ஸ்டாலின்,
இந்த கோரிக்கைகளை முன்வைத்து பேச முடிவு செய்திருந்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சட்டசபையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை, சபாநாயகரும் குறுக்கீடுகளை கண்டுகொள்வதில்லை. சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் உங்களிடம் வந்து இவற்றை தெரிவிக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் இருந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே பேசிய சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது
ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே குறுக்கீடு செய்கின்றனர் என புகார் கூறினார். ஆளும் கட்சியினரின் குறுக்கீட்டை பேரவைத் தலைவர் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.