பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், (வயது 66), இதய கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி லண்டனில் உள்ள
இளவரசி கிரேஸ் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு இதய மருத்துவ நிபுணர்கள் சிபாரிசு செய்தனர்.
அதையடுத்து கடந்த 31-ந் தேதி அவருக்கு இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்து, கோளாறுகளை டாக்டர்கள் சரி செய்தனர். தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை மனைவி குல்சம் நவாஸ், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர், லண்டன் பார்க்லேனில் உள்ள இல்லத்துக்கு அழைத்து சென்றனர்.
அவர் குடும்பத்தினருடன் ஊக்கமாக இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்ட காட்சியை, மகள் மரியம் நவாஸ் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.