கோவையில் கேம்பஸ் இன்டர்வியூக்கான பட்டியலில் தனது பெயர் இல்லாததால் மனமுடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரை சேர்ந்தவர் பொதுப்பணித்துறை என்ஜினியர் சீனிவாசன்(47). அவரது மகன் அஸ்வின் பாலாஜி(21). சீனிவாசனின் தந்தை ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி சிவராமன்(74) கோவையில் வசித்து வருகிறார்.
அஸ்வின் தனது தாத்தா சிவராமனின் வீட்டில் தங்கி சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ வைத்து மாணவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.
கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை கல்லூரி நிர்வாகம் தான் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யும். இந்நிலையில் கேம்பஸ் இன்டர்வியூக்கான பெயர் பட்டியலில் அஸ்வினின் பெயர் இல்லை.
பட்டியலில் தனது பெயர் இல்லாததை பார்த்த அஸ்வின் மனமுடைந்தார். இந்நிலையில் அவர் நேற்று தனது தாத்தா வீட்டின் கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சிவராமன் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து சிவராமன் கதவை உடைத்து பார்த்தபோது அஸ்வின் தூக்கில் தொங்கினார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.