பிறப்பின்போதே இதயத்தில் ஓட்டை இருந்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு, உதவி கேட்ட சிறுமிக்கு உடனடியாக உதவி செய்துள்ளார் பிரதமர் மோடி.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த 6 வயது சிறுமி வைஷாலி யாதவ். இவருக்கு பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டை இருந்திருக்கிறது. இதையடுத்து அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.
பெயிண்டராக வேலை செய்து வரும் வைஷாலியின் தந்தையால், குடும்ப செலவையும் பார்த்துக் கொண்டு, வைஷாலியின் மருத்துவ செலவையும் கவனிக்க முடியாத நிலை இருந்திருக்கிறது.
இந்நிலையில், ஒருநாள் தனது வீட்டில் வைஷாலி டி.வி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது டி.வி.யில் பல நபர்களுக்கு பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்திருக்கிறது. இதையடுத்து, தனது மாமாவின் உதவியுடன்,
தனது உடல் நிலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அத்துடன் தனது இரண்டாம் வகுப்பு அடையாள அட்டையின் நகலையும் அனுப்பியிருக்கிறார்.
இதைப்பார்த்த பிரதமர் மோடி, வைஷாலிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து,
பிரதமர் அலுவலகத்தில் இருந்து புனே மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு வந்திருக்கிறது. பிரதமரின் தனிச் செயலாளர்களில் ஒருவரும், புனே மாவட்ட கலெக்டரிடம் தொலைபேசியிலும் பேசியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2-ம் தேதி ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் வைஷாலி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4-ம் தேதி இதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கும் ஆபரேஷன் நடத்தப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வைஷாலிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.