தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியர்கள் விரும்பிய குரூப்பில் சேர்ந்து படிக்க ரூ.5000 வரை கட்டணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, நேற்று காலை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பழைய மாணவர்களுடன், புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். முதலாம் வகுப்பில் சேர்வதற்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்று, மிட்டாய்கள் வழங்கினர்.
காஞ்சிபுரத்தில் கோலாகலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அரசு பள்ளியில் மாணவரை சேர்க்கும் பெற்றோரை பாராட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
பள்ளி திறந்த நாளான நேற்று, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுக்குப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 1ம் வகுப்பு சேர்ந்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகம் கவுரப்படுத்தியது.
மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், ஏழு மாணவியர், மேட்டுக்குப்பம் பள்ளியில் 1ம் வகுப்பில் நேற்று சேர்ந்தனர்.
காலை, 9 மணிக்கு, மாணவர்கள் அனைவரும் கிராம கோவிலில் கூடினர். மாணவர்கள் 10 பேருக்கும் மாலையிட்டு, ஊர்வலமாக பள்ளி வரை, பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வந்தனர்.
மாணவ, மாணவியர்களுடன் வந்த மாணவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். இந்த புதுமையான முயற்சியை, அப்பகுதியினர் பாராட்டினர்.
கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி சீர்வரிசை என்ற பெயரில், சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்த்தனர். இந்த ஆண்டு மாலை மரியாதையுடன் மாணவ, மாணவிகள் வரவேற்கப்பட்டனர்.
பெற்றோர் போராட்டம் சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அப்பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை கட்டணம் கேட்பதாகவும், அவ்வாறு பெறப்படும் கட்டணத்திற்கு ரசீது ஏதும் தரப்படமாட்டது என்றும்
பள்ளி நிர்வாகம் கூறுவதாக புகார் எழுந்தது. மேலும், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவியருக்கு இடம் வழங்க அலை கழிக்கப் படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர்கள், பள்ளியில் சீருடையின் வண்ணங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.
அத்துடன், சீறுடைகளை தங்கள் பள்ளியில் வாங்க வேண்டும் என்று பெற்றோரை நிர்பந்திப்பதாகவும் புகார் தெரிவித்தனர். பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வழங்க ஐநூறு ருபாய் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினர்.
பெற்றோர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்டக் கல்வி அதிகாரி சிவசண்முகம் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், பெற்றோரிடம் பேசிய அவர், "சுயநிதி பிரிவில் மாணவிகளை சேர்க்க, இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படுவது இயல்பானது.
ஆனால், அந்தக் கட்டணத்தை குறைந்த அளவில் நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பேன். புகார்கள் எதுவாக இருந்தாலும், உரிய ஆதாரங்களோடு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
முதல்வர் தனிப்பிரிவில் புகார் தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பம் போல் கட்டணத்தை கட்டச்சொல்லி பெற்றோர்களை வற்புறுத்துவதாக தமிழ்நாடு மாணவர் - பெற்றோர்
நலச்சங்க தலைவர் செ.அருமைநாதன் தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வர் தனிப்பிரில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில், தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர் பொறுப்பு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காலியாக உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான (2016-17) கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, கல்விக்கட்டணம் தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆகவே, கட்டண நிர்ணயக்குழு தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பம் போல் கட்டணத்தை கட்டச்சொல்லி பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கட்டணக்குழு கடைசியாக நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும்'' என்று அருமைநாதன் கூறியுள்ளார்.