அதிபர் பதவிக்கு ஹலாரிக்கே தகுதி உள்ளது.... ஒபாமா !

கலிஃபோர்னியா தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் ஹிலரி க்ளிண்டனை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
முதற்கட்டமாக அதிபர் ஒபாமா, ஹிலரிக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று பாராட்டியும் உள்ளார்.

மேலும் , ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிபர் பதவியின் பொறுப்புக்களையும், சிரமங்களையும் நன்றாகவே அறிவேன். நானும் ஹிலரியும் உட்கட்சி தேர்தலில் போட்டி போட்ட காலமாகட்டும், 

பின்னர் என்னுடன் இணைந்து வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய காலமாகட்டும், பின் லாடனை தீர்த்துக்கட்டும் முக்கிய முடிவை எடுத்த நேரமாகட்டும், ஹிலரியின் முடிவுகளையும் , உறுதியையும் பார்த்திருக்கிறேன்.

எவ்வளவு சிரமமான வேலையாக இருந்தாலும் திறம்பட செய்து முடிப்பதில் வல்லவர். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை. அவருடன் இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்," என்று ஒபாமா கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவின் ஆதரவு தனக்கு மிகவும் பெருமைக்குரியதாகும். எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. நான் தயாராக இருக்கிறேன் என்று ஹிலரி நன்றி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

ஒபாமாவைத் தொடர்ந்து, துணை அதிபர் ஜோ பைடனும் ஹிலரிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹிலரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸை வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் ஒபாமா சந்தித்துப் பேசினார். டொனால்ட் ட்ரம்ப் - ஐ தோற்கடிக்க ஜனநாயகக் கட்சியினர் ஓரணியில் திரண்டு 

தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியத்தை அவரிடம் வலியுறுத்தியுள்ளார். சான்டர்ஸும், தன்னுடைய தேர்தல் அனுபவத்தையும், கட்சியினரின் எதிர்பார்ப்புகளையும் ஒபாமாவிடம் பகிர்ந்துள்ளார்.

அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை ஹிலரியுடன் இணைந்து எப்படி நிறைவேற்றலாம் என்று இருவரும் விவாதித்ததுள்ளனர். 

ஹிலரியுடன், துணை அதிபர் பதவிக்கு சான்டர்ஸ் போட்டியிட வாய்ப்பில்லை. சான்டர்ஸ் ஆதரவாளர்களான இளைஞர்களின் கோரிக்கைகளை ஹிலரியின் பிரச்சாரத்திலும் சேர்க்க வாய்ப்புள்ளது.

கூடவே ஒபாமா, ஹிலரிக்கு முக்கிய அமைச்சர் பதவி கொடுத்ததைப் போல், சான்டர்ஸ்க்கும் உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை தருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் ஒபாமா பல்வேறு விதமான யோசனைகளை சான்டர்ஸிடம் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

ஒபாமா சந்திப்பை முடித்து விட்டு வந்த சான்டர்ஸ், ஹிலரி க்ளிண்டனுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் - ஐ தோற்கடிப்பதற்கு ஹிலரியுடன் இணைந்து தேவையான அனைத்து பணிகளையும் தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் இறுதியாக நடைபெற உள்ள வாஷிங்டன் டிசி உட்கட்சி தேர்தலில் இருந்து சான்டர்ஸ் விலகப் போவதில்லையாம். 

ஹிலரியும் 'சான்டர்ஸின் ஜனநாயக ரீதியான போட்டியை வரவேற்கிறேன். அவர் கட்சிக்கும் ஜனநாயக வளர்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்' என்று பாராட்டியுள்ளார்.

கட்சியின் அறிவிக்கப்படாத அதிபர் வேட்பாளர் ஆகிவிட்ட ஹிலரியின் கவனம் தற்போது துணை அதிபர் வேட்பாளர் தேர்வில் உள்ளது. முன்னதாக டெக்சாஸை சார்ந்த , 

சான் அன்டோனியோ முன்னாள் மேயரும், ஒபாமா அமைச்சரவையில் வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சருமான ஹூலியன் காஸ்ட்ரோ துணை அதிபர் வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் இருந்தார்.
பெர்னி சான்டர்ஸ்க்கு இளைஞர்கள் மத்தியில் எழுந்த பேராதரவு, அவர்களை கவரக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை ஹிலரி உணர்ந்துள்ளார். 

சான்டர்ஸ் போன்ற சோசலிஸ்ட் கொள்கை கொண்ட இன்னொரு வளர்ந்து வரும் தலைவரான எலிசபெத் வாரன் பக்கம் அனைவருடைய கவனமும் திரும்பியுள்ளது.

உட்கட்சி தேர்தல் உச்சகட்டமாக இருந்தவரையிலும் வாரன் தனது ஆதரவை சான்டர்ஸுக்கோ ஹிலரிக்கோ தெரிவிக்க வில்லை. வியாழக் கிழமை இரவு வாரன், ஹிலரிக்கு ஆதரவைத் தெரிவித்த கையோடு டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையாக தாக்கி தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

சான்டர்ஸைப் போல் 'எல்லோருக்கும் சமமான பொருளாதார நிலை' உள்ளிட்ட சோசலிச கொள்கைகளைக் கொண்ட வாரன், திறமையாக வாதம் செய்யக்கூடியவர். இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்.

இந் நிலையில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், உடனடியாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை, துணை அதிபருக்காக தேடிக்கொண்டு இருக்கிறேன். 

அவர் பெண்ணாகவும் இருக்கலாம் என்று ஹிலரி தெரிவித்துள்ளார். எலிசபெத் வாரன் தான் ஹிலரி தெரிவித்த அந்த பெண்ணாக இருக்கக் கூடும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.

'ஹிலரி க்ளிண்டன் - எலிசபெத் வாரன்' காம்பினேஷனில் அதிபர் தேர்தல் போட்டி அமைந்தால் அதுவே மற்றுமொரு வரலாறு ஆகும். 

இருவரும் இணைந்து வெற்றி பெற்று விட்டால், உலக வரலாற்றிலே பெண் இனத்திற்கு மிகவும் பெருமை தேடித் தந்த ஆண்டாக 2016அமையும்! -டல்லாஸிலிருந்து இர தினகர்
Tags:
Privacy and cookie settings