சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பீதியை உருவாக்கி வரும் கூலிப்படைகளை களைய மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு,
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது.
திமுக சார்பில் நான் தொடர்ந்து கூலிப் படையினரின் அட்டகாசம் தொடர்பாக அறிக்கை விட்டு வருகிறேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கான விவாதத்தில்
பங்கேற்றுப் பேசிய போதும் விரிவாக கூறியிருக்கிறேன். ஆனாலும் என் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா கூலிப்படை கொலைகளே நடக்கவில்லை என்பது போல் பூசி மெழுகி பேசி
"முழுப் பூசனிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைப்பது போல்" பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எதிர்க்கட்சியின் சார்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குக் கூட முதலமைச்சர் பொறுப்பாக பதிலளிக்காமல் அரசியல் சாயம் பூசி பதில் கூறுவது
மாநில மக்களின் பாதுகாப்பின் மீது அக்கறை இல்லாத, பொறுப்பில்லாத அதிமுக அரசின் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.
கூலிப் படைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை மறந்து விட்டு, நடப்பது எல்லாம் கூலிப்படையின் கொலைகளே அல்ல என்று ஆளும் அதிமுக அரசின்,
அதுவும் குறிப்பாக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.
மக்களை நேரடியாக பாதிக்கும் இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டாமல் தலைநகர் சென்னையிலும் தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டி, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்,
வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட அனைவர் மத்தியிலும் பீதியை உருவாக்கி வரும் கூலிப்படைகளை களைய மாவட்டவாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.