சென்னை திருவான்மியூரில் வைத்து சுவாதி கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளதாக நேற்று இரவுக்கு மேல் ஒரு பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதை போலீஸார் மறுத்துள்ளனர்.
அதே சமயம், கொலையாளி குறித்த முக்கிய விவரத்தை இன்று பிற்பகலுக்குள் போலீஸார் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இளம் பெண் சுவாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற நபர் துணிகரமாக தப்பிச் சென்று விட்டார். அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், ஏன் கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த வழக்கை தற்போது நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட மாநகர போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொலையாளியை திருவான்மியூர் பகுதியில் வைத்து நேற்று போலீஸார் கைது செய்து விட்டதாக திடீரென ஒரு தகவல் பரவியது.
திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். தங்களது பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.
ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் மறுத்துள்ளனர். அதேசமயம், கொலையாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று பிற்பகலுக்குள் கொலையாளி கைது குறித்த விவரம் வெளியாகலாம் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.