பள்ளித் தோழிகள் தடுத்து நிறுத்திய சிறுமி திருமணம் !

மன்னார்குடி அருகே 15 வயது சிறுமிக்கு நேற்று நடைபெற இருந்த திருமணத்தை பள்ளித் தோழிகள் தலையிட்டு, அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்துள்ள திருப்பத்தூரில் வசித்த நேபாளத்தைச் சேர்ந்த கூர்கா வேலை பார்த்து வந்தவரின் 15 வயது மகள் திருப்பத்துரை

அடுத்துள்ள பள்ளங்கோவில் அரசுப் பள்ளியில் கடந்தாண்டு 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தாண்டு அவரை பள்ளிக்கு அனுப்பாமல், அவரது பெற்றோர் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றனர்.

மேலும், அந்த சிறுமிக்கு பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சிறுமிக்கு பண்ருட்டியில் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதையறிந்த, அந்த சிறுமியுடன் பள்ளியில் படித்த தோழிகள், திருப்பத்தூர் கிராம மக்கள் உதவியுடன் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட நன்னடத்தை அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்ளிட்டோர்

நேற்று முன்தினம் திருப்பத்தூர் சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்தனர். சிறுமியின் பெற்றோரிடம், சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்துரைத்தனர். 

பின்னர், அவர்களிடம் சிறுமிக்கு தற்போது திருமணம் செய்து வைக்க மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அவரது பள்ளித் தோழிகளுக்கு திருப்பத்தூர் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings