முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்திருப்பதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார். அரசியல் கட்சியாக இல்லாமல் தனிப்பட்ட ஒரு அமைப்பாக இருப்பதால் கொடி கட்டுவது,
போஸ்டர் ஒட்டுவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான நடிகர் கருணாசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.
தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது அமைப்பின் கொடியை பயன்படுத்துவதில் கருணாஸுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டன. ஜாதி அமைப்பு கொடியை கட்டுவதற்கு எதிர்ப்புகள் எழவே, நான் அனைவருக்கும் பொதுவானவன் என்று சொல்லி வாக்குக் கேட்டார் கருணாஸ்.
பல முக்கிய தலைவர்களே மண்ணை கவ்விய நிலையில் தப்பி பிழைத்து வெற்றி வாகை சூடி எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் அடி எடுத்து வைத்துள்ளார் கருணாஸ். இந்த நிலையில், தனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார் ஆகியோர் எந்தப் பின்னணியில் அரசியல் கட்சிகளை நடத்துகிறார்கள் என் பது நாட்டுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் பொதுத் தளத்தில் அரசியல் செய்ய எந்தத் தடங்கலும் இல்லை.
ஆனால், எங்களுக்கு ஒரு சுவரொட்டி ஒட்டுவதில் கூட சிக்கல் இருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார் கருணாஸ். ஏழு ஆண்டுகளாக அமைப்பு நடத்தும் நான் எந்த சமுதாயத்துக்கும் எதிராக இதுவரை கருத்துத் தெரிவித்தது இல்லை. எனக்குத் தெரிந்தது தமிழினம், தமிழ் மொழி இந்த இரண்டும் தான்.
எனது நண்பர்களில் பலபேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். எனது சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜாதி - மதம் பார்க்காமல் 153 பேரை பட்டதாரிகளாக்கி இருக்கிறேன்.
இருந்தாலும் என்னை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளம் கொண்டு பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் ஆறு கட்சிகளின் கொடிகளையும் எனது காரில் கட்டி இருந்தேன். ஆனால், எங்களது அமைப்பின் கொடியை மட்டும் கட்டக்கூடாது என சிலர் பிரச்சினை செய்தார்கள்.
நாங்கள் அரசியல் கட்சியாக இல்லாமல் தனிப்பட்ட ஒரு அமைப்பாக இருப்பதுதான் இதற்குக் காரணம். எனவேதான் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவானவனாக இருக்கவே விரும்புகிறேன் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.