உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியை அவரின் கள்ளக்காதலனுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் முஹமது அலி(38). மரம் வெட்டும் தொழிலாளி.
இவருக்கும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி தெக்கேப்பொற்றாவை சேர்ந்த சுலைகாவிற்கும் (33) 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சுலைகாவின் செல்போனிற்கு வரும் மிஸ்ட்கோல்கள் மூலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை அடுத்த சிதலியை சேர்ந்த சுரேஸூடன் (38) அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் இந்த செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த முஹம்மது அலி அவரைக் கண்டித்துள்ளார். தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்ய சுலைகா திட்டம் தீட்டினார்.
இதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்ட கணவரை வடக்கஞ்சேரி யிலிருந்து ஆலத்தூருக்கு பஸ்ஸில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் கள்ளக் காதலன் சுரேஷின் பைக் கில் கணவரை கோவைக்கு அனுப்பியுள்ளார்.
அங்கே கஞ்சிக்கோடு ரயில் நிலையம் அருகே, சுரேஷ், முஹமது அலிக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையிலிருந்த முஹமது அலியை ரயில்வே தண்டவாளம் அருகே அழைத்து சென்று தலையில் கல்லால் தாக்கி சுரேஷ் கொலை செய்துவிட்டு தலை மறைவாகியுள்ளார்.
புதுச்சேரி கசபா பொலிஸார் முஹம்மது அலி உடலை பாலக்காடு அரச வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் முஹமது அலி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையில் வேலைக்கு சென்ற கணவர் முஹமது அலியை காணவில்லை என கூறி ஆலத்தூர் பொலிஸ் நிலையத்தில் சுலைகா முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் கள்ளகாதலன் சுரேஸை மதம் மாற்றி முஹமது அலி என்ற பெயரில் சுலைகா திருமணம் செய்ய போவதாக கணவரின் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சுலைகாவை தேடி சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது இருப்பிடத்தை அவர்களது செல்போன் மூலம் கண்டறிந்து மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த சுரேஷ், சுலைகா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.