கடந்த ஆட்சி காலத்தில் ஐவரணி போட்ட ஆட்டத்தால் அதிர்ச்சியடைந்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை அப்படி எந்த அணியையும் உருவாக்கப்போவதில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்காரர்களின் புகார்கள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய அணியை நியமித்தார் முதல்வர்.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.
முதல்வருக்கு அடுத்த இடத்தில் இவர்கள் அதிகார மையமாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் முதல்வரை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அவர்கள் நடவடிக்கைகள் சென்றன.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த ஐவரணியினரும், தேர்தலில் போட்டியிட விரும்பிய அதிமுகவினரிடம், தங்களது சிபாரிசு இருந்தால்தான் ஜெயலலிதா சீட் தருவார் என்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வீட்டின் முன்பு சீட்டுக்காக திரண்டிருந்த கூட்டம் இதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதுபற்றி உளவுத்துறையும், முதல்வருக்கு விரிவான தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்தார் ஜெயலலிதாய அடுத்தடுத்த நாட்களில், ஓ.பி.எஸ், பழனியப்பன் வீடுகளில் ரெய்டுகள் பறந்தன. இந்த ரெய்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் அமைச்சர்களிடம் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் கேட்ட போதிலும், அதிமுகவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில் பலம் வாய்ந்த திமுகவின் ஐ.பெரியசாமிக்கு எதிராக நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதியில் களமிறக்கினார் ஜெயலலிதா. எதிர்பார்த்ததை போலவே நத்தம் தோற்றார். ஒரத்தநாடு தொகுதியில், வைத்திலிங்கம் எதிர்பாராதவிதமாக தோற்றார்.
இப்படி ஐவரணி முக்கிய பிரமுகர்கள் தோற்ற நிலையில், இந்த முறை இந்தமுறை ஐவரணியில் யார் இடம் பெறுவார்கள்?
என சீனியர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. ஆனால், ஐவரணி என்ற ஒன்றுக்கே முதல்வர் இடமளிக்க விரும்பவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தமுறை ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோர் மட்டுமே அமைச்சர் பதவியை பெற்றுள்ளனர். பழனியப்பன் மீது முதல்வர் இன்னமும் கோபத்தில்தான் இருப்பதாக தெரிகிறது.
ஆட்சியின் முதல்நாளிலேயே, ஆய்வுக் கூட்டங்களில் துறை அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்றால் மட்டுமே போதும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
இதனால் அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கிவிட்டார். இனிமேல் ஐவரணி கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இருக்க தேவையில்லை என்று அதிமுகவினர் மகிழச்சியாக தெரிவிக்கிறார்கள்.