ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 96 வயதில், பல்கலைக் கழக பட்டம் பெற்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் தகாமட்சு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷகெமி ஹிராடா (96).
2-ம் உலகப் போரின் போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005-ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக் கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்துவந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். பெரும்பாலும், வீட்டில் இருந்தபடியே பயிற்சி மேற்கொண்ட இவர், மிக சொற்பமான நாட்களே கல்லூரிக்குச் சென்றார்.
எனினும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை அண்மையில் அவருக்கு பல்கலைக்கழகம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன், கின்னஸ் உலக சாதனை பட்டியலில் ஹிராடா இடம்பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஹிராடா, ‘‘100 ஆண்டுகள் வரை வாழவேண்டும் என்பதே எனது அடுத்த லட்சியம். ஆரோக்கியத்துடன் இருந்தால், மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பேன்.
சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை. இந்த வயதில், புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.