குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது 1980-களில் கண்டறியப்பட்டது.
பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.
அந்த நோயின் பாதிப்பால் அவ்வப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருவது முகமது அலி வழக்கம்.
சில தினங்கள் முன்பு அவருக்கு நோய் தாக்கம் அதிகமாக இருந்தது. சுவாசக் கோளாறு பிரச்னையும் ஏற்பட்டது.
பீனிக்ஸ்-ஏரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். உடல் நலம் தொடர்ந்து மோசமாகி வந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை முகமது அலி உயிர் பிரிந்தது.
களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றி பெற்றவர் முகமது அலி. அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள். எனவே இவர் நாக்-அவுட் நாயகன் என்றே அழைக்கப்பட்டுவந்தார்.
ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வென்ற ஜாம்பவான் குத்துச்சண்டை வீரர் முகமது அலியாகும். குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலி என்று வர்ணிக்கப்படுகிறார்.