ஜேர்மனியைச் சேர்ந்த, இரு கால்களையும் இழந்த பராலிம்பிக் வீராங்கனை ஒருவர் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருந்த வேளையில்
அவரின் செயற்கைக் கால்கள் இரண்டும் திருடப்பட்ட சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
'எனது கால்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்' என மன்றாட்டமாக அவர் டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார். வனேசா லோ எனும் இவ்வீராங்கனை 1990 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர்.
15 ஆவது வயதில் ரயில் ஒன்றினால் மோதப்பட்டு இரு கால்களையும் இழந்தார்.
எனினும், செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு எழுந்து நடமாட ஆரம்பித்த அவர் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபற்றுகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான T42 100 மீற்றர் ஓட்டம், நீளம் பாய் தல், T42 நீளம் பாய்தல் போட்டிக ளில் அவர் பங்குபற்றுகிறார்.
2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டிகளிலும் அவர் பங்குபற்றினார்.
கடந்த வருடம் கத்தாரில் நடைபெற்ற, சர்வதேச பராலிம்பிக் குழுவின் (ஐ.பி.சி) உலக வல்லவர் போட்டிகளில் வனேசா லோ, நீளம் பாய்தலில் 4.79 மீற்றர் பாய்ந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றவர்.
தற்போது அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் அவர் தங்கியிருக்கிறார். அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தற்போது நடைபெறும் ஐ.பி.சி. குரோன் ப்றீ போட்டிகளிலும் அவர் பங்குபற்றுகிறார்.
இப் போட்டிகளில் நீளம் பாய்தலில் அவர் 4.65 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றார்.
அதன் பின் 100 மீற்றர் போட்டியில் பங்குபற்றவிருந்த நிலையில், ஓட்டப் போட்டிக்காக அவர் பயன்படுத்தும் செயற்கை கால் காணாமல் போயிருந்தது.
அதையடுத்து தனது கால்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் வனேசா.
இக் கால்களையே அவர் எதிர்வரும் ரியோ பராலிம்பிக் போட்டிகளிலும் பயன்படுத்த வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரங்கில் வைக்கப்பட்டிருந்த இக் கால்கள் காணாமல் போனவுடன் தான் மிகவும் மனமுடைந்து போனதாக அவர் தெரிவித்தார்.
'யாரேனும் இப்படி செய்வார்கள் என நான் எண்ணியிருக்கவில்லை. அவை விசேடமான பை ஒன்றுக்குள் வைக்கப்பட்டிருந்தன. எனவே, எவரும் அதை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை' என அவர் கூறினார்.
எனினும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் அக்கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்தும் வனேசா டுவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.
பின்னர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ரயில்வே கடவையொன்றில் ஏற்பட்ட விபத்தில் வனேசா லோவின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன.
அதன்பின் அவர் எழுந்து நடமாடுவதே சிரமம் என மருத்துவர்கள் கூறினராம். ஆனால், 6 மாதங்களின் பின் அவர் மீண்டும் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.
பின்னர் விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் ஈடுபட ஆரம்பித்து T42 நீளம் பாய்தலில் உலக சம்பியனாக விளங்குகிறார். இவர் 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக வல்லவர் போட்டிகளின் போது,
ஓட்டப் போட்டியில் தான் பயன்படுத்தும் செயற்கைக் கால்களை ஹோட்டல் அறையிலேயே மறதியாக வைத்து விட்டு விளையாட்டு அரங்குக்குச் சென்றிருந்தார்.
பின்னர் அவரின் பயிற்றுநர் ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்று அக் கால்களை கொண்டு வந்து கொடுத்தாராம்.