திருநெல்வேலியில் அம்மா உணவகங்களில் நூதன வழிகளில் முறை கேட்டில் ஈடுபட்டதாக 9 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் நெல்லை சந்திப்பு, பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை மார்க்கெட், திம்மராஜபுரம் ஆகிய 10 இடங்களில் ஏற்கனவே அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.
அனைத்து அம்மா உணவகங்களிலும் 1200 இட்லி, 300 சம்பார் சாதம், 300 தயிர் சாதம் விற்பனை செய்யப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
1200 இட்லிக்கு 20 கிலோ புழுங்கல் அரிசி, 6 கிலோ உளுந்து, தயிர் சாதம் தயாரிக்க பச்சரிசி 20 கிலோ தயிர் 12.50 லிட்டர், சமையல் எண்ணெய் 1 லிட்டர்,
சம்பார் சாதம் தயாரிக்க 20 கிலோ புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு 8 கிலோ, சமையல் எண்ணெய் 2.50 லிட்டர், சம்பார் பொடி 1.25 கிலோ மற்றும் மசாலா பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான அம்மா உணவகங்களில் அரசு நிர்ணயித்த அளவில் உணவு தயாரிக்கப்படுவதில்லை. மிகக் குறைவான அளவு உணவு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதே நேரத்தில் உணவு தயாரிக்க அரசு கொடுத்த சமையல் பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை ஊழியர்கள் தங்களுக்குள் பங்கும் பிரித்திருக்கின்றனர்.
மேலும் குறைவாக உணவு தயாரித்து விட்டு கேஸ் சிலிண்டரை அதிகமாக பயன்படுத்தினோம் என்றும் பொய் கணக்கு எழுதியிருக்கின்றனர். இப்படி அம்மா உணவகங்களில் எங்கெல்லாம் 'கை' வைக்க முடியுமோ அங்கெல்லாம் முறைகேடு செய்துள்ளனர்.
இதில் தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை உணவகங்களில் தான் அதிக முறைகேடு நடந்தது தெரியவந்தது.
மேலப் பாளையத்தில் சிலிண்டரை பதுக்கி கள்ளத்தனமாக கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் விற்பனையும் செய்திருக்கின்றனர்.
இதையடுத்து அம்மா உணவக ஊழியர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே தொண்டர் சன்னதி தெருவில் உள்ள அம்மா உணவக ஊழியர் ஒருவர் வையாபுரி உணவகத்துக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அந்த உணவகத்தில் கோலோச்சி வரும் அதிமுக பிரமுகரின் மகள், புதிதாக வேலைக்கு வந்த ஊழியரை நீ எப்படி இங்கு மாறி வரலாம் என தாக்கியதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.