ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. இதனால் தீர்ப்பு இந்த மாதத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, கீழ்நீதிமன்ற தண்டனையை உறுதி செய்ய வலியுறுத்தி
கர்நாடகா மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் தரப்பு வாதங்களும், பின்னர் கர்நாடக தரப்பில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதங்களும் முன் வைக்கப்பட்டன.
மே 12ம் தேதி நடந்த விசாரணையின் போது, ஜூன் 1ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நேற்று காலை ஆச்சார்யாவும், பிற்பகலில் வருமான வரித்துறையினர் சார்பிலும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுப்ரமணியசாமியின் எழுத்துபூர்வமான வாதமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணை முடிந்ததும் அன்றைய தினமே தீர்ப்பு தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.