ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மழை வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக செயற்கையாக மலைகளை நிர்மாணிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மழை வீழ்ச்சி குறைவாக உள்ளது. இந்நிலையில் காற்றை குளிர்வித்து மழையை ஏற்படுத்துவதற்காக செயற்கையாக மலையொன்றை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட யூனிவர்ஸிட்டி கோர்ப்பரேஷன் ஃபோர் அட்டோம்ப்ஷயர் ரிசேர்ச் (யூ.சி.ஏ.ஆர்.) எனும் நிறுவகத்தைச் சேர்ந்த நிபுணர்கள்,
இந்த செயற்கை மலைக்கான மாதிரிகள் (மொடல்) குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என தலைமை ஆராய்ச்சியாளரான ரோலப் புருய்ன்ஜெஸ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையின் அறிக்கையொன்று இந்த கோடைப் பருவத்தில் எமக்கு கிடைக்கும் என அவர் கூறினார். இத்திட்டத்தின்படி சுமார் 2 கிலோ மீற்றர் உயரமான மலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இம்மலை எந்த இடத்தில் நிர்மாணிக்கப்படும், அதற்கான செலவு எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. மலையை நிர்மாணிப்பதற்காக பல்வேறு இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றன என ரோலப் புருய்ன்ஜெஸ் கூறினார்.
செயற்கையாக மலையை நிர்மாணிப்பது இலகுவான விடயமல்ல. இத்திட்டம் அரசாங்கத்துக்கு மிக அதிக செலவை ஏற்படுத்தும் எனில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது.
ஆனால், நீண்ட கால அடிப்படையில் எத்தகைய மாற்று வழிகளைக் கையாளலாம் என்பது குறித்த ஒரு யோசனை இது” எனவும் அவர் தெரிவித்தார்.
ஓமானுடனான எல்லையிலுள்ள 1925 மீற்றர் (6316 அடி) உயரமன ஜெபில் அல் ஜேசிஸ் சிகரமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயரமான சிகரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.