புதுக்கோட்டையில் ஒரே வீட்டில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பனியன் ஆலை
அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர், அவது மனைவி, இரு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் பிரச்சினை தொடர்பாக இந்த தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதே பாணியில் புதுக்கோட்டையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் மொத்தமாக தற்கொலை செய்து உயிர் நீத்துள்ளது.
புதுக்கோட்டை காமராஜர்புரம் மரக்கடை வீதி பி.ஆர்.ஆர். முக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். 58 வயதான இவர் சர்வேயராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி பெயர் சாந்தா. 54 வயதான இத்தம்பதிக்கு ராதாகிருஷ்ணன் (26) என்ற மகனும், அபிராமி (24) என்ற மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். அபிராமிக்குத் திருமணமாகி விட்டது.
அவரது கணவர் ஊர் தஞ்சாவூர் ஆகும். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி பிரிந்து வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 4ம் தேதி முதலே கண்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
அவர் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருப்பார் என்று நினைத்து அக்கம் பக்கத்தினர் இருந்து விட்டனர். இன்று அதிகாலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். வீடும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது 3 பேர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். சாந்தா படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார்.
உடல்கள் முழுமையாக அழுகிப் போய் விட்டிருந்தன. நான்கு நாட்களுக்கு முன்பே இவர்கள் இறந்திருக்க வேண்டும் என்று கூற்படுகிறது. உடல்களை மீட்ட போலீஸார் அவற்றைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. குடும்பபப் பிரச்சினை காரணமாக தற்கொலை நடந்ததா அல்லது கடன் தொல்லையா என்று தெரியவில்லை. இந்த நிலையில் கண்ணன் எழுதி வைத்த ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
ஆனால் அதில் உள்ள எழுத்துக்கள் நீர் பட்டு அழிந்துள்ளன. சரிவர தெரியவில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.