பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் ஒழிக்க முடியாது. ஒரு பயங்கரவாதத்துக்கெதிரான இன்னொரு பயங்கரவாதம், இரு தரப்பிலும் அழிவுகளை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறது.
ஆனால், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதை உணர்வதில்லை. அதை என்றோ உணரும்போது காலங் கடந்துவிடுகிறது. உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதங்களுக்கு வித்திடுகிறது.
அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.இயக்கம் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இன்றைய சமூக வலைத்தளங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி, இவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில் இலங்கையில் கூட ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கம் முழுமையாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஐ.எஸ். அமைப்பினர்?
ஐ.எஸ். எனப்படும் இந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.
ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஐ.எஸ். ஐ.எஸ் இன் கொள்கை.
ஸூன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களான ஐ.எஸ். இயக்கம் ஈராக் படையினரை வெற்றிகொண்டு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி
அதனை இஸ்லாமிய கலீபா ஆட்சிக்குட்பட்ட ஒரு தனிநாடாக ஏனைய நாடுகளின் ஒப்புதலின்றி தாமாகவே அறிவித்திருந்தது.
அத்துடன், தனது பெயரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனவும் மாற்றியமைத்துக்கொண்டது. இதனையடுத்து, உலகம் முழுவதும் அதிகளவில் பேசப்படும் இயக்கமாக ஐ.எஸ். மாற்றமடைந்துவிட்டது.
ஆனால், ஐ.எஸ். இயக்கம் என்பது திடீரென உருவானதொரு இயக்கமல்ல. 2000ஆம் ஆண்டிலிருந்து பல்வேறுபட்ட பெயர்களில் இயங்கி வந்திருப்பதற்கான தகவல்கள் உள்ளன.
ஜமாஅத் அல் தவ்ஹீத் வல் ஜிஹாத் எனும் பெயரில் அபுல் முஸாப் அல் ஷர்காவி எனும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் ஒருவரினால் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிளர்ச்சி அமைப்பினர் சிலரும் இணைந்துள்ளனர்.
தொடர்ந்து அல் கைதா துணையுடன் 2003ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கில் அல் கைதாவின் ஈராக்கின் இயக்கம் போல “அல் கைதா இன் ஈராக்” என்ற பெயரில் செயற்பட ஆரம்பித்துள்ளது.
அத்துடன், முஜாஹிதீன் ஷூரா சபை என்ற பெயரிலும் செயற்பட்டு தற்போது ஐ.எஸ். என்ற வடிவத்தினை வந்தடைந்துள்ளது.
2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியிலேயே அல் கைதாவிலிருந்து முற்றாகப் பிரிந்த ஐ.எஸ். இயக்கம், அல் கைதாவுடன் இணைந்திருந்த காலத்தில் ஈராக்கிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுதல்,
ஈராக்கில் கலீபா ஆட்சியை ஏற்படுத்துதல், ஈராக்கை தளமாகக்கொண்டு ஏனைய நாடுகளை தாக்குதல், இஸ்ரேலைத் தாக்குதல் என்ற இலக்குகளுடன் செயற்பட்டிருந்தது.
அல் கைதாவுடனான பிரிவுக்கு பின்னர் முன்னைய இலக்குகளுடன் சேர்த்து, ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான், குவைத், சைப்பிரஸ் மற்றும் தெற்கு துருக்கி உள்ளிட்ட
பகுதிகளைக் கைப்பற்றி கலீபா (இஸ்லாமிய ஆட்சியாளர்) ஆட்சியை ஏற்படுத்துதல், தமது ஆட்சிக்குட்பட்ட எல்லையில் ஷியா முஸ்லிம்களை அழித்தல் போன்ற இலக்குகளையும் திட்டங்களையும் விஸ்தரித்துள்ளது ஐ.எஸ்.
அபூபக்கர் அல் பக்தாதி
இந்நிலையிலேயே, 2010ஆம் ஆண்டில் ஐ.எஸ். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை அபூபக்கர் அல் பக்தாதி ஏற்றார்.
இவர் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி இருந்த போதிலும் மக்கள் முன்னிலையில் தோன்றாமலேயே இருந்தார். இதனால் பக்தாதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
2011ஆம் ஆண்டளவில் பக்தாதி குறித்த தகவல்கள் வழங்கினால் 130 கோடி ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பக்தாதியின் உருவம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் நிலவின.
இந்நிலையில் கடந்த மாதம் இஸ்லாமிய கலீபாவான பின்னர் மக்கள் முன்னிலையில் முதல் தடவையாக தோன்றி தனக்கு ஆதரவளிக்குமாறு இஸ்லாமியர்களைக் கேட்டுக்கொண்டு வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் பக்தாதி.
1971ஆம் ஆண்டு பிறந்த பக்தாதி ஈராக்கில் இஸ்லாமிய சட்டம் தொடர்பில் முதுமாணி பட்டம் பெற்றவர் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தன்னைத்தானே கலீபா இப்றாஹிம் என அறிவித்துள்ள பக்தாதி தலைமையிலான ஐ.எஸ். இயக்கம், தற்போது முன்னரை விட வேகமாக ஈராக்கின் பல பகுதிகளை தாக்கி பக்தாத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
சுமார் 10 ஆயிரம் படைவீரர்களை மட்டுமே கொண்டிருந்த ஐ.எஸ். இயக்கம் சமூக ஊடகங்களின் வழியாக கடந்த சில வருடங்களாக உலகளவில் பெரும் ஆட்பலத்தை சேர்த்து வருகிறது.
இந்த வருடம் மட்டும் 20,000க்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஐ.எஸ். இல் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜேர்மனி என 90 வெவ்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் இணைந்துள்ளனர்.
ஓரிடத்திலிருந்து ஒளிந்து கொண்டு அவ்வப்போது ஒரு தாக்குதலை நிகழ்த்துகின்ற ஒரு இயக்கமாக ஐ.எஸ். செயற்படவில்லை. அரண்கள் அமைத்து ஒரு இடத்தில் மட்டுப்படாமல் முன்னேறும் வழிகளிலேயே தாக்குதலுக்கான திட்டங்களையும் பகிர்ந்துகொள்கின்றது.
தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தனது இலக்கினை நோக்கி ஐ.எஸ். நகர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் தமது இருப்பினை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக் குள்ளாகியுள்ள
ஈராக் அரசு ஐ.எஸ். இயக்கத்தின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த கடுமையான பிரயத்தனங்கள் எடுப்பது போன்று அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றது.
ஈராக் படையின் வான் வழித்தாக்குதல்களின் பின்னடைவே ஐ.எஸ். முன்னேறக் காரணமாகின்றது எனக் கூறுகிறது.
ஈராக் அரசு, வான்வழித் தாக்குதல் சாதனங்களை அமெரிக்காவிடமிருந்து பெற முயற்சிக்கின்ற போதிலும் அவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஈராக் ஜனாதிபதி மாலிக் அல் நூரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.எஸ். இயக்கமானது அமெரிக்காவின் கைப்பாவை எனவும் ஐ.எஸ். இன் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டவை எனவும் இணையத் தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவுகின்றன.
ஷியா மற்றும் ஸூன்னி முஸ்லிம்களிடையே தீராப் பகையை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாம்.
இதனை உறுதி செய்வதுபோல தன்னிச்சையாக போர் முடிவுகளை எடுக்கும் அமெரிக்காவானது ஐ.எஸ். விடயத்தில் ஈரானை, ஈராக்குக்கு உதவி செய்ய அழைக்கின்றது.
அதேவேளை, தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க மத ஸ்தலங்களை ஐ.எஸ். அழித்து வருகின்றது. இது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித இடமான மக்காவிலுள்ள கஃபாவை தகர்க்கவும் ஐ.எஸ். தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், இஸ்ரேலைக் குறிவைத்தே ஐ.எஸ். இன் காய் நகர்த்தல் அமைந்துள்ளதாக யூதர்களின் ஊடகங்கள் சில குறிப்பிடுகின்றன. ஏனெனில், மத்திய ஆசிய வரலாற்றில் ஜெருசலேமை நோக்கிய நகர்வுக்காகவே அத்தனை சண்டைகளும் இடம்பெற்றுள்ளன, இடம்பெறுகின்றன.
குறைந்தளவிலான எண்ணிகையான படையினரை மட்டுமே கொண்டுள்ள ஐ.எஸ். இயக்கத்துக்கு இது பலமாக அமைந்துள்ளது. இதுவே 30 ஆயிரம் பயிற்சி பெற்ற
ஈராக் இராணுவத்தினை மீறி 1.8 மில்லியன் சனத்தொகை கொண்ட ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினால் கைப்பற்ற முடிந்ததாகக் கூறப்படுகின்றது.
சமூகவலைத்தளங்களை ஊடகமாக பயன்படுத்தும் தீவிரவாதம்
ஐ.எஸ். இயக்கம் ஊடகங்களை சரியாக பயன்படுத்தி வருகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக இணையங்களில் இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.
இதை பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், செயற்பாடுகள், செய்திகள் போன்றவற்றை பெரும் பகுதியினரிடம் எளிதாக சென்றடைய இவர்கள் வழிவகுக்கிறார்கள்.
ஐ.எஸ். பணவரவு, ஆயுதவரவு
பணக்கார ஆதரவாளர்களிடம் இருந்து நன்கொடையாகவும், சில கொள்ளை சம்பவங்களில் கொள்ளையடித்த பணத்தையும் வைத்து இவர்கள் இயங்கி வருகிறார்கள்.
குறைந்தது 3 மில்லியன் டொலர்கள் வரை இவர்களுக்கு தினமும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து நிதியுதவி வந்தவண்ணம் உள்ளது.
இந்தியா உட்பட 20 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மூலம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. சபையினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் துருக்கியை சார்ந்த 13 நிறுவனங்களும் அதற்கடுத்தபடியாக இந்தியாவை சார்ந்த 7 நிறுவனங்களும் உட்பட அமெரிக்கா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் செயற்படும் நிறுவனங்களில் இரசாயன ஆயுதங்கள்,
வெடி மருந்துகளை தூரத்தில் இருந்து வெடிக்க செய்வதற்கான அலைபேசிகள் போன்ற 700 பொருட்களை தயாரித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் இவர்களை உலகை அழிக்க பேரழிவை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஐ.எஸ், அவர்களுக்கான உரிமை போர் இது என்று விளக்கமளிக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மத்தியில் அப்பாவி மக்கள் தான் அதிகம் உயிர் இழக்கிறார்கள். உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள்
* பிரசல்ஸ் நகரத் தாக்குதல்
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் சென்ற மாதம் 22ஆம் திகதி ஜவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும் மேல்பீக் சுரங்க புகையிரத நிலையத்திலும் இடம்பெற்ற தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கிறார்கள்.
* பாரிஸில் தொடர் தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் திகதி மிகப்பெரிய தொடர் தாக்குதலை நடத்தினார்கள்.பிரான்ஸ் விளையாட்டரங்கம் மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த தாக்குதலில் 127 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.
ரஷ்ய விமானத் தாக்குதல்
* பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 224 பேர் பயணித்த 7K9268 எனும் விமானமே கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று சினாய் தீபகற் பத்திற்கருகே நெதேல் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது.
சிரியாவில் ரஷ்யா தமது இயக்கத்திற்கு எதிராக மேற்கொண்ட விமானப் படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே ஐ.எஸ்.அமைப்பு இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கின்றது.
இத்தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் விபத்திற்குள்ளான விமானத்தை ஒத்த வடிவில் விமானமொன்று வெடித்துச் சிதறும் காணொளியையும் தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் உறுதியான தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை. இருந்தும் இது ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதலாக இருக்கவேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பாதுகாப்பு நிலைமைகள், போர் மோதல்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெரிக்க நிறுவனமான சர்வதேச யுத்த ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இலங்கையும் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டிருந்த வரைபடத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணி கடந்த ஆண்டில் இலங்கையர்களை அழைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களின் ஊடாக தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள அந்த அமைப்பு முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஈராக், பலஸ்தீனம், சிரியா, இஸ்ரேல், லெபனான், அமெரிக்கா, கனடா, சவூதி அரேபியா, ஈரான், சீனா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை தமது இலக்காக தீவிரவாத அமைப்பு பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டே இலங்கையில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளை தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியமுடிகிறது.
மேலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 60 இணைய தளங்களை முடக்குவது குறித்து தற்போது இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான இந்த இணைய தளங்கள் பலவற்றை பல நாடுகள் தடை செய்துள்ளன.
எனினும், இந்த இணைய தளங்களில் பல, ஐரோப்பிய நாடுகளின் இணைய நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 44 இணைய தளங்களை இந்தியா முடக்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 45 குடும்பங்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள சென்றுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து அரசாங்கம் இணைய தளங்களை முடக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புலனாய்வுப் பிரிவின் இந்த தகவல்களை பொய்ப்பிக்க அரச சார்பற்ற நிறுவனமொன்று முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தவேளையில் ”ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான், என் முதல் பணி,” என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த, ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ஒபாமா பேசியபோது, உலகின் அமைதியை சீரழித்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பலம் குறையத் துவங்கியுள்ளது.
பெல்ஜியத்தில் சமீபத்தில் நடந்த தாக்குதலை பார்க்கும்போது, கொடூர தாக்குதல்கள் நடத்தும் பலம் அவர்களிடம் இன்னமும் உள்ளமை தெரியவருகின்றது.
அதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான் என் முதல் பணி; அவர்களின் தலைமை, நிதி வசதி, உட்கட்டமைப்பு ஆகியவற்றை முற்றிலும், அழிக்க வேண்டும்.
இது போன்ற தாக்குதல்களை இனியும் பொறுத்துக்கொள்ள கூடாது என்றார். ஐ.எஸ். இயக்கத்தின் இலக்குகள் குறித்த துல்லியமான தகவல்கள் இல்லாத நிலையில் அது எங்கே செல்லப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.