அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், மார்பகங்களைப் பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை செய்துகொண்டிருந்ததால், கங்காருவின் தாக்குதலின்போது உயிர் தப்பியதாகக் கூறுகிறார்.
தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தைச் சேர்ந்த ஷெரோன் ஹென்ரிச் (45) ஹெலன் சால்டர் ஆகிய இரு பெண்கள் சுற்றுலா பகுதியொன்றில் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டிருந்தபோது இருவரும் கங்காருவின் தாக்குதலுக்குட்பட்டனர்.
இதன்போது ஷெரோன் ஹென்ரிக்கின் மீது மேற்படி பாரிய கங்காரு பாய்ந்து அவரின் உடலின் மீது தனது கால்களைப் பதித்தது. பின்னர் ஹெலன் சால்டரின் முதுகையும் அக் கங்காரு தாக்கியது.
இத் தாக்குதலில் ஷெரோன் ஹென்ரிக் படுகாயமடைந்தார். அவரின் 3 விலா எலும்புகளை மாற்றீடு செய்ய வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அவரின் மார்பகங்களைப் பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சையின்போது, மார்பகங்களுக்குள் வைக்கப்பட்ட சிலிக்கான் பைகளும் சேதமடைந்தன.
எனினும், இந்த பைகள் காரணமாகவே தான் உயிர் தப்பியதாக ஷெரோன் கூறுகிறார். இவை உயிர்காப்பு காற்றுப் பைகள் (எயார் பேக்) போன்று செயற்பட்டதாக ஷெரோன் தெரிவித்துள்ளார்.
அக் கங்காரு பார்ப்பதற்கு அழகாக தென்பட்ட போதிலும் அது பாய்ந்து தாக்கிய போது தானும் ஹெலனும் சுமார் ஒன்றரை மீற்றர் தூரம் பறந்து வீழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.