ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆன்லைனில் 60 ஆயிரத்தும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின்(53) பதவிக்காலம், செப்டம்பரில் முடிகிறது. அவருக்கு, மேலும் இரு ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
இந்நிலையில், அவரது பதவி நீட்டிப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், பலதரப்பில் கருத்துக்கள் பரவலாக கூறப்பட்டு வருகின்றன. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, சுப்பிரமணியன் சாமியின் சமீபத்திய இலக்காக ரகுராம் ராஜன் உள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை, ரகுராம் ராஜன் சீர்குலைத்து விட்டதாக, குற்றச்சாட்டுகளை, சாமி, அள்ளி வீசி வருகிறார். இந்நிலையில் ரகுராம் ராஜனுக்கு பலரும் ஆன்லைனில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ரகுராம் ராஜனின் பதவியை நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேஞ்ச்.ஓ.ஆர்.ஜி., நிறுவனம் ஆன்லைனில் நடத்திய கையெழுத்து பிரசாரத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.
அதே போல் ராஜனின் பதவி நீட்டிப்பை வலியுறுத்தி, பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பலாரியா என்பவரின் ஆன்லைன் மனுவில் 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத் திட்டுள்ளனர்.
ரகுராம் ராஜனுக்கு எதிராக, அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க கூடாது என துவங்கப்பட்ட ஆன்லைன் மனுவில் வெறும் 15 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.