மக்களின் நலன் சார்ந்து புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து கலக்கி வரும் புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநர் கிரேண் பேடி, தற்போது மேலும் ஒருபடியாக வாட்ஸ்ஆப் குரூப்பில் உயர் அதிகாரிகளுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரேண் பேடி, பொறுப்பேற்ற சிறிது நாட்களிலேயே மக்களை கவரும் வகையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், அரசு எவ்வாறு பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் எடுத்துக்காட்டும் அளவிற்கு அவர் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் மக்களுக்காக 1031 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப் படுத்தியிருந்தார்.
இதன் மூலம் மக்கள் தாங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் எளிதில் புகார் தெரிவிக்க முடியும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம், ஊழல் முறைகேடுகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அடுத்த வாரம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
இதேபோல, அடிப்படை மற்றும் பொதுப்பிரச்சினைகள், பேரிடர் போன்றவற்றுக்காக 1070 என்ற இலவச தொலைபேசியும் அடுத்த வாரம் செயல்பாட்டுக்கு வருகிறதாம். இந்த எண்ணை அடுத்த வாரத்தில் நிறுவ கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
அரசுத்துறை அலுவலகம் என்றால் எப்போது வேண்டு மானாலும் வரலாம், போகலாம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும்.
மேலும், மாலை 5 மணி முதல் முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்டவர் ஒழுங்காக இருக்காரா என கேள்வி மக்களிடையே எழலாம்.
அதற்கும் தனது செயல்பாட்டின் மூலமாக பதில் அளித்திருக்கிறார் கிரேண்பேடி. ஆளுநர் மாளிகையில் தன்னை சந்திக்க வரும் மக்களிடம் தானே நேரடியாக குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்தும் வருகிறாராம்.
இந்நிலையில், உயரதிகாரிகளை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக வாட்ஸ்அப் குரூப்பில் கிரேண்பேடி இணைத்துக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் தலைமைச் செயலர், துறை செயலர்கள், ஐஜி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை அனுகக்கூடிய அந்தந்த துறைகளின் அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளார்களாம்.
இதன் மூலம் துணை நிலை ஆளுநராக உள்ள கிரேண்பேடி, தனக்கு தெரியவரும் மக்கள் பிரச்சனைகளை எளிதில் அதிகாரிகள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். நாராயணசாமி முதல்வர் பதவியை ஏற்பதற்குள் ஒரு ரவுண்டு புரட்சியை முடித்து விடுவார் போல கிரண்பேடி!