சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு... ஜெ.,வுக்காக யாகம் நடத்தும் அதிமுகவினர் !

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டதால் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. 
இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு சாதகமான தீர்ப்பு வருவதற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் அதிமுகவினர் மீண்டும் யாகம் நடத்த ஆரம்பித்துள்ளனர். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற

மகாருத்ர ஹோமத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான அதிமுகவினருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி என்றாலே ஜெயலலிதாவின் பெயரில் யாகங்களும், அர்ச்சனைகளும் களை கட்டும். 

அதுவும் ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவகாரங்கள் என்றால் ஹோமம், யாகம், பூஜை புனஸ்காரங்களைத் தாண்டி அலகு குத்துவது, காவடி எடுப்பது, அங்க பிரதட்சணம் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் என அனைவரும் கோவில்களில் சுற்றி வருவார்கள். 

கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா சிறை சென்றது முதல் விடுதலை பெற்று மீண்டும் முதல்வரானது வரை இதனை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர்.

அதிமுகவினரின் பிரார்த்தனைகளுக்கும், வேண்டுதல்களுக்கும் பலன் கிடைக்காமல் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்குகளை அடித்து நொறுக்கி விட்டு வழக்கில் இருந்து விடுதலையானது மட்டுமல்லாது மீண்டும் வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் ஜெயலலிதா.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 6வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றுள்ள இதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடைபெற்ற போது கையாண்ட வித்தையை அதிமுகவினர் மீண்டும் தொடங்கி விட்டனர். மீண்டும் கோவில்களில் யாக பூஜைகள், அன்னதானங்கள் களை கட்டி வருகின்றனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நீலாம்பரி தாயார் சமேத திருநீலகண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சுவாமியும் அம்பாளும் 

ஒரே கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் இது. இந்தக் கோவிலில் ஞாயிறு காலை ஜெயலலிதா பெயரில் மகா ருத்ரஹோமம் அதிமுகவினர் சார்பில் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும், சென்னை மாநகராட்சியின் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவருமான எம்.சி.முனுசாமி தலைமையில் நடந்த யாகத்தில்,

கோவில் குருக்கள் சிவஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார் யாக பூஜையை நடத்தினார். வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பொருட்கள் ஹோமகுண்டத்தில் போடப்பட்டு யாகம் நடைபெற்றது.
யாக முடிவில் திருநீலகண்டேஸ்வரர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

எந்தவொரு பிரச்னைகள் இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தி அதிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காகவும், தீர்க்காயுளோடு இருப்பதற்காகவும் செய்யப்படும் யாகம் மகா ருத்ரஹோமம் என்று யாகம் நடத்திய சிவாச்சாரியார் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுதலையாகவும், அம்மா இறைவன் அருளோடு நீடுழி வாழ இறைவனை வேண்டி 

இந்த திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் யாகம் நடத்தி அன்னதானம் வழங்கியிருக்கிறோம் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ?
Tags:
Privacy and cookie settings