எனக்கு இலவச மின்சாரம் வேண்டாம்.. கோவை டெய்லர் !

"ப்ரீயாக் கொடுத்தால் பினாயிலைக் கூட குடிப்ப நீ" என்று கரகாட்டக்காரன் படத்தில் செந்திலைக் கவுண்டமணி கலாய்ப்பார். ஆனால் தமிழகத்தில் அரசு கொடுத்த இலவசத்தை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு டெய்லர். 
அவர் கோவையைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி. வீடுகளில் 100 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரம் இலவசம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இது நடைமுறைக்கும் வந்துள்ளது. ஆனால் இந்த இலவச மின்சாரம் தனக்குத் தேவையில்லை என்று நிராகரித்துள்ளார் டெய்லர் முத்துக்குமாரசாமி. கோவையைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி ஒரு டெய்லர். சிறிய அளவில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இலவச மின்சாரத்தை நிராகரித்தது குறித்து அவர் கூறியதாவது:

வீடுகளில் பயன்படுத்தப்படும் 100 யூனிட் மின்சாரம் வரை கட்டணம் கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நிச்சயம் இது மக்களுக்குப் பலன் தரும்.

ஆனால் இந்த இலவச மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு ரூ. 1000 கோடி செலவாகும் என்றும் செய்திகளில் படித்தேன். எனக்கு சராசரியாக 2 மாதங்களுக்கு ரூ. 600 மின்கட்டணம் வரும். நான் மாதம் ரூ. 10,000 முதல் 15,000 வரை சம்பாதிக்கிறேன்.

என்னால் எனது வீட்டுக்கு வரும் மின் கட்டணத்தை சுலபமாக கட்ட முடியும். எனவே நான் எனக்கு அரசு தரும் இலவச மின்சாரத் திட்டத்தை திருப்பி அளிக்க முடிவு செய்தேன். 
இதற்குப் பதில் கஷ்டப்படும் வேறு யாருக்காவது இந்தத் திட்டம் போய்ச் சேர்ந்து அவர்களுக்கு பலன் தரட்டும் என்றார் குமாரசாமி.

மேலும் அவர் கூறுகையில் நான் எனது நண்பர்களிடம் இது குறித்துக் கூறியபோது அவர்களும் வரவேற்றனர். 

ஆனால் இதுகுறித்து அரசு உரிய முறையில் அறிவிப்பு வெளியிட்டால் தாங்களும் இணையத் தயார் என்று அவர்கள் கூறியதாக கூறினார் முத்துக்குமாரசாமி. வித்தியாசமானவர்தான்!
Tags:
Privacy and cookie settings