எதிர்க்கட்சித் தலைவருக்காக தமிழக அரசு வழங்கிய வாகனத்தை திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களை வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்டது.
எனவே அவருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது போல சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனம், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.
அதுபோல ஸ்டாலினுக்கு அரசு சார்பில் இன்னோவா கார் வழங்கப்பட்டது. அதனை திரும்ப ஒப்படைத்துள்ள அவர், தனது சொந்த காரை பயன் படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
காரில் கட்டக்கூடிய மூவர்ண கொடி, அரசு இலட்சினை ஆகியவற்றை மட்டும் அவர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீடிக்கும் என்றும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.